பஞ்சமி நிலத்தை பத்திரப்பதிவு செய்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர் ! நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் !.?
தமிழ்நாடுஅரசு பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்து அரசை ஏமாற்றியவர்கள் மீதும், நிலத்தை மோசடியாக பதிவு செய்ய உதவியாக இருந்தவர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என உடுமலைப்பேட்டை பகுதியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், போடிபட்டியில் வசித்து வருபவர் கார்த்திகேயன், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய ஆதிதிராவிட நலத்துறை இயக்குனருக்கு புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார். அந்த புகார் மனுவில்… போடிபட்டி ஊராட்சிமன்றத் தலைவராக பதவி வகித்து வருபவர் செளந்தரராஜன். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடு செய்ததாக கடந்த ஆண்டு அப்போதைய திருப்பூர் மாவட்ட ஆட்சியரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இவரது பதவி நீக்கம் தமிழ்நாடு அரசிதழிலும் வெளியானது.
போடிபட்டி ஊராட்சிமன்றத் தலைவர் செளந்தரராஜனின் மனைவி மகாலட்சுமி என்பவர் பெயரில், ஜல்லி பட்டி ஊராட்சி வெங்கிட்டாபுரம் கிராமத்தில் பட்டா எண் ; 567 க.ச.எண் ; 46A8 , 46A9 , 46A2 , ஆகிய காலங்களில் வரும் ஆவண எண்கள் 7199/2022 மற்றும் 9352/2021 ஆகிய ஆவணங்களின் படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட Form F Land உபரி நிலத்தை போடிபட்டி ஊராட்சிமன்ற தலைவராக இருக்கும் செளந்தரராஜன், மனைவி மகாலட்சுமி பெயரில் மோசடியாக வாங்கியுள்ளதாக, கார்த்திகேயன் என்பவர் புகார் மனு அளித்திருக்கிறார். அந்த மனு சம்பந்தமாக துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் விசாரணை செய்து ஆய்வறிக்கையினை சமர்ப்பித்துள்ளார்.
மேற்படி ந.க.எண் : 18078 /2023 , ஆய்வறிக்கை நாள் 26.08.2023 ஆய்வறிக்கையின் படி பட்டா எண் 587 மற்றும் ஆவண எண் : 7199 / 2022 மற்றும் 9352 / 2021 ஆகிய ஆவணங்களின் படி கோவை நிலச் சீர்திருத்த ஆணையரின் 592/MRIV / F 10.02.1933 A.o.No.1511 யின் படியும் புல எண் : 46/A9 நம்பர் 0.20 ஏர்ஸ் பூமி, ஆறுமுகம் த/பெ வேலுச்சாமி என்பவருக்கும் கோவை நிலச் சீர்திருத்த ஆணையர் அவர்களின் 592/MRIV / நாள் 10.02.1993 A.O.No.1512 ன் படியும் 46/A2 த/பெ வேலுச்சாமி , கெங்கன் மாதாரி கோவை நிலச் சீர்திருத்த ஆணையரின் 592/MRIV/ F நாள் 18.03.1993 A.O.No.பூமியானது 0.40.5 ஏர்ஸ் பூமி நிலமானது நாடிமுத்து த/பெ வேலாயுதம் என்பவருக்கு இருபது ஆண்டு நிபந்தனையின் பேரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றும் அதன் பின்னர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த செளந்தரராஜன் மனைவி மகாலட்சுமி வெங்கிட்டாபுரம் கிராமம் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பத்மநாபன் மகன் செந்தில்குமார் என்பவருக்கு ( ஆவண எண் : 8566 / 2022 ) படி கிரையம் செய்து கொடுத்துள்ளார்.
மேற்படி நிலங்களை கிரயம் வாங்கிய மகாலட்சுமி , செந்தில்குமார் ஆகிய இருவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் நிலச் சீர்திருத்த சட்டத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட பட்டாவினை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விற்பனை செய்தது, ஆவணங்களின் அடிப்படையிலும் விசாரணையின் அடிப்படையிலும் தெரியவந்துள்ளது.
பின்னர் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் விசாரணையில், போடிபட்டி ஊராட்சிமன்ற தலைவர் செளந்தரராஜன் மனைவி மகாலட்சுமி தனது வாக்குமூலத்தில் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக நிலத்தை வைத்துக்கொள்ள கேட்டதாகவும், மகாலட்சுமி தனது அறியாமையின் காரணமாக பத்திர பதிவு மேற்கொண்டதாகவும், விசாரணையின் போது கிரையம் பெறக்கூடாது என்கிற விபரத்தினை தெரிந்து கொண்டதால், அந்த கிரையத்தினை ரத்து செய்து வாங்கிய நபர்களிடமே திரும்ப ஒப்படைத்து விட்டதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதுசம்பந்தமாக புகார் கொடுத்துள்ள கார்த்திகேயன் கூறுகையில்… புகார் மனுவில் நாடிமுத்து என்பவரது சொத்தினை மகாலட்சுமி செளந்தரராஜன் என்பவர் சட்டத்திற்கு புறம்பாக கிரையம் பெற்றுள்ளார் என்பதை, ஆதாரங்களுடன் மனுவில் தெரிவித்ததாகவும், உடுமலை வட்டாட்சியர் இது சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், புகார் மனு குறித்து தனது ஆய்வறிக்கையில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. நாடிமுத்து என்பவரிடம் வாக்குமூலம் மற்றும் விசாரணை செய்யாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.