அவினாசி தனியார் அரிசி ஆலையில் ஆயிரக்கணக்கான டன் ரேஷன் அரிசி மூட்டைகள் ! தூங்கும் உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் !

தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் துறை மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், ரேசன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கி வருகிறது. இந்த இலவச அரிசியை சில தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் தரகர்கள் மூலம் குறைந்த விலைக்கு வாங்கி வெளிமாநிலங்களுக்கு கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது அனைவரும் அறிந்ததே ! தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து எடுத்துவரும் நெல் மூட்டைகளை வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்துவிட்டு, ரேசன் அரிசியை பாலீஷ் செய்து அரசுக்கே அனுப்பி மோசடி செய்து வருவதும் துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் அறிந்ததுதான்.

தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கப்படும் ரேசன் அரிசியை திருப்பூரிலிருந்து ரயில் மூலமாகவும், கோவை வழியாக சாலை மார்க்கமாகவும் கேரளாவுக்கு கடத்தி அதிக லாபம் பார்த்து வருகின்றனர். கடத்தல் பேர்வழிகள் கையும் களவுமாக சிக்கினாலும் புட்செல் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு தப்பித்து விடுகின்றனர். மேலும் புட்செல் அதிகாரிகளுக்கு கொடுத்துவிட்டுத்தான் தொழில் செய்கிறோம், ஏன் எங்களை தொந்தரவு செய்கிறீர்கள் ? என ரயில்வே போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாரிடம் வாக்குவாதம் செய்கிறார்கள். போலீசார் நெருக்கடி கொடுத்தால் அவர்களுக்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு தப்பித்து விடுகின்றனர்.

மேலும் அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் கொள்முதல் நிலையங்களில் கிடைக்கும் நெல்லை வைத்து அதிக லாபம் பார்க்க இயலாது என்பதால், கள்ளச்சந்தை வியாபாரம் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க தரகர்கள் மூலமாக பொது மக்களிடம் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பாலீஷ் செய்து, தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் வெளிமாநில தொழிலாளர்களிடம் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். மேலும் பாலீஷ் செய்யப்பட்ட அரிசியை அரசு குடோனுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

இதில் என்ன வேடிக்கையான விஷயம் என்றால், அவிநாசி மதுவிலக்குத்துறை அலுவலகத்திற்கு அருகிலேயே பூரணி அரிசி ஆலை இயங்கி வருகிறது. அங்கு அரசு முத்திரை பொறிக்கப்பட்ட ஏராளமான சாக்கு பண்டல்களுடன், ஆயிரக்கணக்கான டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அங்கே சட்ட விரோதமாக ரேசன் அரிசி கடத்தல் தொழில் நடைபெறுவது உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிக்கும், மதுவிலக்கு அதிகாரிகளுக்கும் தெரியாமலா இருக்கும் என்கிற சந்தேகமும் அப்பகுதியினர் மத்தியில் எழுந்துள்ளது. தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் பற்றிய செய்திகள் ஆதாரத்துடன் வெளிவந்தும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவது வேதனைக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

பெரும்பாலும் திருப்பூர், கோவை மாவட்டங்களில் ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்களை முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும், முடிந்த அளவுக்காகவாவது தடுக்க முயற்சிக்கலாம். இதை எதையுமே செய்யாமல் ஆட்கள் பற்றாக்குறை என்கிற ஒற்றைக் காரணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இயங்காமல் இருப்பது உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு அழகல்ல என பெரும்பாலானோர் புலம்பி வருகின்றனர்.




