பள்ளி சீருடையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுத்த மாணவன்

தமிழகம் முழுவதும் பொதுமக்களின் குறைகளை மனுக்களாகப் பெற்று நிவர்த்தி செய்யும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் என்கிற பெயரில் முகாம் நடத்தி அரசு அலுவலர்கள் மனுக்களை வாங்கி வருகின்றனர். அவ்வாறு வாங்கப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காண வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. அப்போது பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட புதுநகர் 2 வது வார்டு 5 மற்றும் 6 வது தெருக்களில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர் தெருக்களில் ஆறு போல் ஓடுவதால் பொதுமக்களுக்கு மலேரியா டெங்கு டைப்பாய்டு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகையால் இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தருமாறு பள்ளி மாணவன் மகிழன் செல்வம் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்து பள்ளி சீருடையில் மனு கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள், சிறுவனுக்கு உள்ள சமூக ஆர்வத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு அதிகாரிகளும், நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொள்வார்களா ? காத்திருப்போம்…




