போக்குவரத்து போலீசாரின் அட்ரா சிட்டி வைரல் வீடியோ..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் லாரி ஓட்டுநரின் சட்டையை பிடித்து இழுத்து போக்குவரத்து போலீசார் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. பல்லடத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல்லடம் வழியாக கோவை செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் பனப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி சாலை வழியாக சென்று பின்னர் கோவை சாலையை சென்றடையும். மேலும் பல்லடம் நகருக்குள் விதிமுறைகளை மீறி செல்லும் கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் விதிமுறைகளை மீறி நகருக்குள் வந்த லாரியை போக்குவரத்து போலீசார் விரட்டி வந்து நான்கு ரோடு சிக்னல் அருகே வழிமறித்து ஆண்காவலர் ஒருவர் லாரியின் முன்புற கதவை திறந்து ஏறி ஓட்டுநரின் சட்டையை பிடித்து அத்துமீறி நடந்துகொண்ட வீடியோ பதிவாகியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநரை பிடித்து கீழே இறக்கி விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் பொதுமக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் போக்குவரத்து போலீசார் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் மீது அபராதம் விதிப்பதை விடுத்து இது போன்று அத்துமீறி நடந்துகொண்டது ஏன்? போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் போது போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை கட்டுப்படுத்தாமல் இதுபோன்று அடாவடி செயலில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.