திருப்பூர் மாவட்டத்தில் 24 மணிநேரமும் மது விற்பனை ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு – கணியூர் செல்லும் வழியில் அரசு மதுபானக்கடை ( கடை எண் : 2026 ) இயங்கி வருகிறது. கடையின் அருகில் உள்ள பாரில் காலை நேரத்தில் மது விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. கணியூர் மற்றும் சோழமாதேவி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை பெற்றோர்கள் இவ்வழியாக இருசக்கர வாகனத்தில் தினந்தோறும் அழைத்து செல்வது வழக்கம். காலை நேரத்தில் பாரில் மது அருந்திவிட்டு வாகனங்களை வேகமாக இயக்கி வரும் மது பிரியர்களால் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் பெரியவர்கள் வரை அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் இது சம்பந்தமாக அப்பகுதியினர் கூறுகையில்.. காலை நேரத்திலேயே மது குடித்து விட்டு சாலையின் குறுக்கே வாகனங்களை இயக்குவதால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. மது விற்பனையை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் தடுக்க முடியவில்லை. மது குடிப்பவர்கள் செய்யும் தவறுக்காக அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுவது ஏற்புடையதாக இல்லை. சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்துவதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. மது விற்பனை செய்யும் நபர்களோ இதைப்பற்றிய துளியும் கவலையில்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மது விற்பனை காலை நேரங்களில் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறை கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள இடத்தில் செயல்படும் பார் அனுமதி பெற்றுள்ளதா? இல்லையா? என்பதை மதுவிலக்குத்துறை உறுதிபடுத்த வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுப்பது நல்லதாக அமையும் என்பதே அனைவருடைய விருப்பமாக உள்ளது என்கின்றனர் அப்பகுதியினர்.
-சாதிக் பாட்ஷா