என்ன நடக்கிறது திமுகவில்…
அழகிரியின் குரல் எடுபடுமா ? 1 – தொடர்
இரு கோஸ்டிகளுக்கும் இடையே சுவரொட்டி அரசியல் தீவிரமாக நடைபெற்றது. சமாதான முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அழகிரியை முன்வைத்து திமுகவிற்குள் கிளம்பியிருக்கும் சர்ச்சை திமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்கிற கருத்து எழுந்தது. மோதலும் தீராமல் சமாதானமும் ஏற்படாத சூழ்நிலையில் கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாகச் சொல்லி அழகிரியை திமுகவில் இருந்து நீக்கினார் கருணாநிதி. திமுகவினர் யாரும் அழகிரியிடம் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று எச்சரித்தது திமுக தலைமை. வாரிசு அரசியலுக்கு வழிவிடுகிறது திமுக என்கிற விமர்சனங்களுக்கு, மத்தியில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் திமுகவிலிருந்தே நீக்கப்பட்டிருந்தார். அவர் நீக்கப்பட்ட செய்தி மதுரை மாவட்டத்தைத் தாண்டி தென்மாவட்டங்கள் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அழகிரியின் நீக்கம் 2001 ஆம் ஆண்டு தேர்தல் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் சேதத்தை ஏற்படுத்தும் என்று பத்திரிகைகள் அழுத்தமாக சொல்லிக் கொண்டிருந்தன. அடுத்து என்ன செய்யப் போகிறார் அழகிரி என்கிற கேள்வி திமுகவிற்குள் உள்ளும்புறமும் எழுந்தது. 2001ம் ஆண்டு தேர்தலின் போது திமுக வசம் வலுவான கூட்டணி இல்லை. பாஜக, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட சிறுகட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. தமிழகம் முழுக்கவே திமுக பலவீனமாக இருந்த நிலையில் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் திமுக மிகவும் பலவீனப்பட்டிருந்தது திமுக. முக்கியமாக திமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை களம் இறக்கி இருந்தார் மு.க.அழகிரி.
திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு என்று முக்கியமான தொகுதிகளில் எல்லாம் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி திமுக வேட்பாளர்களின் வெற்றியை தடுத்திருந்தார் அழகிரி. அதன்மூலம் பிடிஆர்.பழனிவேல்ராஜன், பி.மூர்த்தி, செ.ராமச்சந்திரன், வேலுச்சாமி, பால்ராஜ் போன்ற திமுகவின் மதுரைத் தளபதிகள் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர். இந்தத் தோல்விகள் அழகிரிக்கான வெற்றி மாலைகளாகப் பார்க்கப்பட்டன.
அழகிரியின் உதவியால் திமுகவினர் வெல்ல முடியும் என்பதை விட, அழகிரியால் திமுக வேட்பாளர்களை வீழ்த்த முடியும் என்கிற பிம்பம் உருவானது. தேர்தல் தோல்விகள் திமுக தலைமையை யோசிக்கவைத்தன.
அழகிரியை தள்ளி வைப்பதை விட அருகில் வைப்பதே வெற்றிக்கு உதவும் என்று தீர்மானித்தது. அந்த சமயம் பார்த்து அரசியல் அதிரடி ஒன்றை நிகழ்த்தினார் அழகிரி. 2001 உள்ளாட்சித் தேர்தலின் போது மதுரை மாநகராட்சியில் திமுக வெற்றி பெற்றிருந்தது. அதனால் திமுகவிற்கு துணை மேயர் பொருப்பு கிடைக்காது என்ற நிலையில் சட்டென்று களத்தில் இறங்கிய அழகிரி அதிமுக கவுன்சிலர்கள் சிலரை திமுகவின் பக்கம் திருப்பி திமுகவிற்கு துணைமேயர் பதவி கிடைக்க வழிவகுத்தார். அப்போது அதிமுக ஆளும் கட்சி என்பதும் முதலமைச்சர் ஜெயலலிதா என்பதும் குறிப்பிடத்தக்கது.
அழகிரியின் அரசியல் சாகசம் திமுக தலைவர் கருணாநிதியை உற்சாகப்படுத்தவே திமுகவில் மீண்டும் முக்கியத்துவம் பெற்றார் அழகிரி. அதன்பிறகு ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட்டனர். ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலின் போது தேர்தல் வேலைகளை எல்லாம் அழகிரியே செய்தார். ஸ்டாலினும், அழகிரியும் ஒரே வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். திமுக தலைவர் கருணாநிதி தொடங்கி துரைமுருகன் வரை பலரும் அழகிரியை புகழ்ந்து பேசினர். அறிய காரியங்களை ஆற்றுவோர்களை இனி அழகிரி என்கிற ஒற்றைச் சொல்லால் அறிஞர்கள் அழைக்கலாம் என்றார் துரைமுருகன். கலைஞரின் சூழான வயதில் சூழ்கொண்ட அழகிரியே என்றார் வைரமுத்து.
அழகிரி மீண்டும் திமுகவில் இணைந்த பிறகு வெளிப்படையான சர்ச்சை இல்லை. ஆனால் சின்னதும் பெரியதுமான கோஷ்டி மோதல்கள் உள்ளுக்குள் நடந்து கொண்டு இருந்தன. குறிப்பாக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், தென்மாவட்ட திமுக கழகத்தினருள் ஒருவருமான தா.கிருட்டிணனுக்கும் அழகிரிக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. தா.கிருட்டிணன் மட்டுமின்றி வேறு பல தலைவர்களிடம் அழகிரிக்கு பிரச்சனைகள் இருந்தன. நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த தா.கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அந்தப் படுகொலை மதுரையைத் தாண்டி தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பத்திரிகைகளின் சந்தேகங்களெல்லாம் அழகிரியை நோக்கியே நகர்ந்தன.
தா.கிருஷ்ணனின் படுகொலை தொடர்பாக அழகிரியும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். தா.கிருஷ்ணன் கொலை வழக்கும் அதில் அழகிரியின் பங்களிப்பும் என்ற தலைப்பில் ஊடகங்கள் எழுதிய கட்டுரையில் திமுகவிற்கு பெரும் நெருக்கடியை கொடுத்தன. ஆனாலும் அழகிரியை கைவிட்டு விட திமுகவும் கருணாநிதியும் விரும்பவில்லை.
அழகிரியின் குரல் எடுபடுமா ? 1 – தொடர்
–டூயட் பாபு (எ) முகம்மது ரிலுவான்
தொடரும்..