பொங்கல் தொகுப்பு வழங்குவதில் குளறுபடி ! பொதுமக்கள் கொந்தளிப்பு !
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில், பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு ( பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, புடவை, வேட்டி ) வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 9 ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னை விருகம்பாக்கம், நடேசன் நகர் நியாய விலைக் கடையில், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதில் புடவை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் புடவை ஏன் வழங்கவில்லை என விற்பனையாளரிடம் அப்பகுதியினர் கேட்டபோது.. வந்தது அவ்வளவுதான், வேண்டுமானால் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளுங்கள், என அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கில், அதிகார தோரணையில் பொதுமக்களை மிரட்டும் தொனியில் பேசி வருகிறார் என அப்பகுதியினர் கூறுகின்றனர். மேலும் இதுசம்பந்தமாக சம்பந்தப்பட்ட நியாயவிலை கடையில் விசாரணை மேற்கொண்ட போது, விற்பனையாளர் பொதுமக்களை அரசுக்கு எதிராக திருப்பிவிடும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் துணை ஆணையர் கவனத்துக்கு, இந்தப் பிரச்சினை சம்பந்தமாக தொலைபேசியில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து, செயல்படுத்திவரும் திராவிட மாடல் அரசுக்கு, பொதுமக்கள் மத்தியில் கெட்டபெயரை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும், மக்களிடம் நேரடி தொடர்பில் இருக்கும் ஊழியர்கள் மீது, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடையில், இவர் பணிக்கு வந்த நாள் முதல் இவரது நடவடிக்கைகள் அனைத்தும் அடாவடித்தனம் நிறைந்ததாகவும், கடையில் எப்போதும் சம்பந்தமில்லாத நபர்களை அமரவைத்து, கூத்தடிப்பதோடு, பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து பணம் சம்பாதிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுசம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு இவர்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.