போலீசார் தேடுதல் வேட்டையில், தப்பிச் சென்றவர்கள் கூலிப்படையினரா ?.!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அதிகாலை நடந்ததாக கூறப்படும் போலீசாரின் அதிரடி வேட்டை பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் பல்லடத்தை அடுத்த பணிக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சின்னியக்கவுண்டன்பாளையத்தில் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராணி தலைமையில் போலீசார் அதிரடியாக அங்குள்ள வீடுகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அங்குள்ளவர்கள் விசாரித்த போது ஒசூரில் 17 வயது சிறுமி காணமல் போன வழக்கில் சிறுமியை தேடி வந்ததாக தெரிவித்தனர்.
பின்னர் வீடு வீடாகச் சென்று தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் சிறிய வீட்டின் முன்பாக சம்பந்தமே இல்லாமல் விலை உயர்ந்த இன்னோவா கார் நிற்பதை கண்டு சந்தேகம் அடைந்து அருகில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது கடந்த 4 தினங்களுக்கு முன்னர் தான் 4 இளைஞர்கள் வந்து தங்கியுள்ளதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் உள்ளே இருந்தவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அங்கிருந்த 4 பேரும் தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்க முயன்று அங்கிருந்த இன்னோவா காரில் தப்பச்சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த ஸ்கூட்டர் உட்பட பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் போலீசாரின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு இது போன்று ஒதுக்குப்புறமாக உள்ள பகுதிகளை தேர்வு செய்து பயங்கர ஆயுதங்களுடன் கும்பலாக கூடாரம் அமைப்பது அதிகரித்துள்ளது. மேலும் மேற்படி சம்பவம் நடந்ததாக கூறப்படும் வீடு அரசியல் பிரமுகருக்கு சொந்தமானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மேற்படி ஒசூர் போலீசாரின் சோதனையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏன் ஆயுதப்படை போலீசாரை அழைக்கவில்லை? மேலும் வீடு வாடகைக்கு தங்குபவர்களிடம் ஆவணங்களை உரிமையாளர் பெற்றிருக்கின்றாரா? ஒரே ஒரு அறை உள்ள வீட்டில் 4 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் வேலைக்கு எதுவும் செல்லாமல் தங்கியிருந்தை அக்கம் பக்கத்தினர் கண்டுகொள்ளாதது ஏன்? மேலும் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களோடு தங்கியிருந்ததாக கூறப்படும் நபர்கள் கூலிப்படையினரா? எதற்காக பல்லடத்தில் தங்கியிருந்தனர்? வேறு எதுவும் சதித்திட்டம் தீட்டி நிறைவேற்ற காத்திருந்தனரா? இது போன்ற கேள்விகள் பொதுமக்களை நடுங்க வைத்துள்ளது.
ஒசூர் போலீசார் தேடிவந்ததென்னவோ சிறுமி வழக்கு சம்பந்தமாகத்தான், ஆனால் தப்பி ஓடியவர்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களா என்பது குறித்தும், எதற்காக ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தனர் என்பது குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்து பொதுமக்களின் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்யவேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.