விமர்சனம்

கூட்டுக் குடும்பத்தின் உன்னதத்தை உணர்த்தும் “பட்டத்து அரசன்” திரைவிமர்சனம் – 3.5/5

சற்குணம் இயக்கத்தில், அதர்வா நடிப்பில், லைகா தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் “பட்டத்து அரசன்”.

கதைப்படி…. காளையார்கோவில் என்கிற ஊரில் சிறந்த கபடி வீரர் என பெயர் பெற்றவர் பொத்தாரி ( ராஜ்கிரண் ). இவருக்கு இரண்டு மனைவிகள். மனைவி மகன்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். ஒரு மனைவியும், மகனும் இறந்துவிட சொத்தைப் பிரித்து மருமகளும், பேரனும் ( அதர்வா ) தனியாக வசித்து வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் கபடி போட்டியில் சிறந்த வீரராக பெயர்பெற்ற பொத்தாரி, குறிப்பாக அரசகுளம் என்ற ஊரை தோற்கடித்ததால் ஊரில் அவருக்கு சிலை அமைத்து மரியாதை செலுத்தி இருந்தனர். இது அவருடன் இணைந்து விளையாடிய சக நண்பர் ஊராட்சி தலைவராக இருப்பவருக்கு பிடிக்கவில்லை. மூன்று தலைமுறைகளாக பொத்தாரி குடும்பத்திற்கு ஊர் மக்கள் மதிப்பளிப்பதையும் அவர் விரும்பாததால் பொத்தாரி குடும்பத்தை பழிவாங்க சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் பொத்தாரியின் பேரன் செல்லையாவிற்கு தமிழகத்திற்காக விளையாட வாய்ப்பு வருகிறது.

அதே நேரம் அரசகுளத்தில் கபடி போட்டி இருக்கும் நிலையில் தனது பேரன் சடகோபன் மூலம் பொத்தாரியின் பேரனை அரசகுளம் கபடி போட்டியில் கலந்து கொள்ளாமல் இருக்கச் செய்த சதி வேலையால் காளையார்கோவில் கபடிக்குழு தோற்கிறது. தோற்றதற்கு செல்லையா மீது பழி சுமத்தியதால் மனமுடைந்து செல்லையா தற்கொலை செய்கிறார். இந்நிலையில் பொத்தாரியின் குடும்பம் ஊருக்கு துரோகம் செய்த காரணத்தினால் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பதாக ஊர் பஞ்சாயத்து முடிவு செய்கிறது. அப்போது தனது தம்பி செல்லையா தவறு செய்யவில்லை என நிரூபிக்க ஊரை எதிர்த்து தனது குடும்பம் கபடிப் போட்டியில் வெற்றிபெறும் என சவால் விடுகிறார் அதர்வா.

பொத்தாரி குடும்பத்தினர் அதர்வாவை ஏற்றுக்கொண்டார்களா ? , ஊரை எதிர்த்து பொத்தாரி குடும்பம் கபடிப் போட்டியில் வெற்றி பெற்றதா ? ஊரை எதிர்த்து சவால் விட்ட அதர்வா என்னவானார் என்பது மீதிக்கதை…..

இந்தப் படத்தில் கூட்டுக் குடும்பத்தின் உன்னதத்தை உணர்த்தும் வகையில் திரைக்கதை அமைத்ததோடு, அண்ணன், தம்பி, தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி ஆகிய உறவுகளின் வாழ்வியலை அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். அதேபோல் தாத்தா குடும்பத்தினர் பாசத்திற்கு ஏங்கும் பேரனாக, பலசாலி இளைஞனாக ரொமான்ஸ் நாயகனாக அதர்வா நன்றாக நடித்திருக்கிறார். ஜிப்ரான் இசையில் பாடல் காட்சிகள் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. கதாநாயகிக்கு இந்த படத்தின் மூலம் சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்ப உறவுகளின் உன்னதத்தை உணர்த்தும் படம் பார்த்ததில் திருப்தி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button