“வருணன்” திரைப்படத்தின் விமர்சனம்

யாக்கை ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில், கார்த்திக் ஶ்ரீதரன் தயாரிப்பில், ராதாரவி, சரண் ராஜ், துஷ்யந்த், ஜெயபிரகாஷ், கேப்ரில்லா, ஜீவா ரவி, மகேஷ்வரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வருணன்”.
கதைப்படி.. வடசென்னையில் வீடுகளுக்கு தண்ணீர் கேன் விநியோகம் செய்வதில் ராதாரவி, சரண் ராஜ் ஆகிய இரதரப்பினரிடையே அடிக்கடி மோதல் நடைபெறுகிறது. ராதாரவி சரண் ராஜ் இருவரும் பரஸ்பர புரிதலுடன் இருந்தாலும் ராதாரவியிடம் வேலை பார்க்கும் துஷ்யந்த், சரண் ராஜின் மைத்துனர் ஷங்கர் நாக் விஜயன் தரப்பினரிடையே அடிக்கடி மோதல் நடைபெறுகிறது. ஏற்கனவே இருதப்பினரும் ஒருவர் தொழில் செய்யும் பகுதியில் மற்றவர் வியாபாரம் செய்யக்கூடாது என ஏரியா பிரித்துக் கொண்டு தொழில் செய்து வருகின்றனர்.

சரண்ராஜின் மைத்துனர் ஷங்கர் நாக் விஜயன், தனது அக்கா மகேஸ்வரியின் துணையோடு தண்ணீர் கேன் தொழிலுடன் சுண்டக் கஞ்சியையும் சேர்த்து வியாபாரம் செய்து வருகின்றனர். சுண்டக் கஞ்சி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், அந்த வியாபாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என நினைத்து, இன்ஸ்பெக்டர் ஜீவா ரவி இவர்களை கண்காணித்து வருகிறார்.

இதற்கிடையில் துஷ்யந்த் கேப்ரில்லா இருவரும் காதலிக்கின்றனர். துஷ்யந்த் மீதான காதல் மிகுதியால் காலி தண்ணீர் கேன்களை அடுக்கி வைத்து அதில் துஷ்யந்த் உருவத்தை ஓவியமாக வரைகிறார். பின்னர் அந்த ஓவியம் வரைந்த கேன்களை எதிர் தரப்பினர் கொண்டு செல்வதாக தெரிந்ததும் துஷ்யந்த் விரட்டிச் செல்கையில் இன்ஸ்பெக்டர் ஜீவா ரவி அந்த வண்டியை நிறுத்தி விசாரிக்கிறார். அப்போது துஷ்யந்த் தனது கேன்களை எடுக்க முயற்சிக்கும் போது அந்த வண்டியில் சுண்டக் கஞ்சி இருப்பது தெரியவருகிறது. சரண் ராஜின் மைத்துனர் ஷங்கர் நாக் விஜயனை கைது செய்ததோடு குடோனையும் சீல் வைக்கிறார்.
பின்னர் இருதரப்பினர் இடையே பகை பெரிதாகிறது. துஷ்யந்த் கேப்ரில்லா காதல் நிறைவேறியதா ? இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பகையால் நடந்த விளைவுகள் என்ன ? என்பது மீதிக்கதை…

பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீர்,இயற்கை நமக்கு கொடுத்த கொடை, அந்த தண்ணீரை விற்பனை செய்து பணம் சம்பாதிப்பவர்களின் செயல்களை தோலுரித்துக் காட்டியுள்ளார் இயக்குநர். ராதாரவி சரண் ராஜ் இருவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நாயகன் துஷ்யந்த் வடசென்னை வாசியாகவே வாழ்ந்துள்ளார். கேப்ரில்லா தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார். மகேஷ்வரி கதாப்பாத்திரத்திற்கு தேவையான வில்லத்தனமான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் ஷங்கர் நாக் விஜயன் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம்.