“எம்புரான்” படத்தின் திரைவிமர்சனம்

ஆசீர்வாத் சினிமாஸ், ஶ்ரீ கோகுலம் மூவீஸ், லைகா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், பிருத்விராஜ், இந்திரஜித் சுகுமாரன், அபிமன்யு சிங், சுராஜ் வெஞ்சரமூடு, ஜெரோம் பிளின், எரிக் எபோனி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “எம்புரான்”.
கதைப்படி.. குஜராத்தில் நடைபெற்ற இன கலவரத்தின் போது, ஒரு அரண்மனையில் தஞ்சம் புகுந்த இஸ்லாமிய குடும்பத்தினர் அனைவரையும், மிகவும் கொடூரமான முறையில் கொன்று குவித்ததோடு, அந்த அரண்மனையை அபிமன்யு சிங் தலைமையிலான கும்பல் அபகரித்துக் கொள்கின்றனர். அதில் பிருத்விராஜ் மட்டும் அவரது தந்தையின் உதவியுடன் தப்பிக்கிறார்.

இந்நிலையில், கேராளாவில் ஐ. யூ.எப் கட்சியின் தலைவராகி முதல்வராக பொறுப்பேற்ற டொவினோ தாமஸ், பணம் மற்றும் தேசிய அரசியலுக்கு ஆசைப்பட்டு, ஜ.யூ.எப் கட்சியிலிருந்து விலகி அபிமன்யு சிங்குடன் இணைந்து புதிய கட்சியில் ஐக்கியமாகிறார். கேரளாவின் முக்கியமான அணை சம்பந்தமாக மக்களுக்கு விரோதமான முடிவையும் எடுக்கிறார். பின்னர் தனது தங்கை மஞ்சு வாரியரையும் ஐ.யூ.எப் கட்சியின் மூலம் அரசியலுக்கு வரக்கூடாது என தடுக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, வெளிநாட்டில் இருக்கும் மோகன்லாலுக்கு, கேரள அரசியல் நிலவரங்கள் குறித்து இந்திரஜித் சுகுமாரன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு மோகன்லாலும் கேரளாவுக்கு வருகிறார்.
அதனைத்தொடர்ந்து மக்கள் விரோத ஆட்சி நடத்தும் டொவினோ தாமஸின் முதல்வர் பதவி மற்றும் மஞ்சு வாரியரின் அரசியல் எதிர்காலம் என்னானது ? சிறுவயதில் தனது குடும்பத்தை அழித்த அபிமன்யு சிங்கை பழிவாங்க துடிக்கும் பிருத்விராஜின் எண்ணம் நிறைவேறியதா? என்பது மீதிக்கதை...

படம் ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்து, இறுதிவரை காட்சி வடிவமைப்புகள் அனைத்தும் புதுமையாகவும் பிரமாண்டமாகவும் வடிவமைத்துள்ளார் இயக்குநர். அதாவது சண்டை காட்சிகள் அனைத்தும் புதுமையாகவும், பிரமாண்டமாகவும் உள்ளது. மோகன்லால் புதுவிதமான முகபாவணையிடன் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம். மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், பிருத்விராஜ், இந்திரஜித் சுகுமாரன், அபிமன்யு சிங் உள்ளிட்ட ஒவ்வொரு கதாப்பாத்திர தேர்வும் சிறப்பு.
மொத்தத்தில் பிரமாண்டமாக புதுவிதமான அனுபவத்தை கொடுத்துள்ளது எம்புரான்.