சிலம்பாட்டத்தில் சீறிப்பாயும் சிங்கப்பெண் குடும்பத்தினர்…
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த திருமுருகன் பூண்டிக்கு அருகே உள்ளது ராக்கியா பாளையம். இப்பகுதியில் உள்ள பாலாஜி நகரில் குடியிருந்து வருபவர் குட்டியண்ணன். மனைவி துர்கா தேவி மகள் தேனரசி(11) மகன் கவின்(8) ஆகியோருடன் வசித்துவரும் நிலையில் மகள் தேனரசி ராக்கியாபாளையம் உயர்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பிலும், மகன் கவின் ராக்கியாபாளையம் நடு நிலைப்பள்ளியில் 3 ஆம் வகுப்பிலும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராக்கியாபாளையம் உயர்நிலைப்பள்ளியில் ஸ்ரீ சக்தி சிலம்ப கலைக்கூடத்தின் சார்பாக பயிற்சியாளர் சக்திமுருகன் தலைமையில் இலவசமாக சிலம்பப்பயிற்ச்சி அளிக்கப்பட்டு வருவதை அறிந்து அங்கு தனது மகள் தேனரசியை பயிற்சிக்காக சேர்த்துவிட்டனர். இதனிடையே வாரத்தில் இரண்டு நாட்கள் பயிற்சிக்காக தனது மகள் தேனரசியை அழைத்துச்சென்று திரும்பவும் அழைத்து வந்துள்ளார். அப்போது பள்ளியின் ஓரமாக அமர்ந்து சிலம்ப பயிற்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த துர்கா தேவிக்கு தானும் பயிற்சியில் சேர ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பயிற்சியாளர் சக்திமுருகனிடம் தனது விருப்பத்தை தெரிவித்தபோது மறுப்பேதும் தெரிவிக்காமல் பயிற்சியில் சேர்த்துக்கொண்டுள்ளார்.
பின்னர் தனது மகன் கவினையும் பயிற்சிக்கு அழைத்து வந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் சிலம்பப் பயிற்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளனர். போர் சிலம்ப பயிற்சியில் கைதேர்ந்த துர்கா தேவி ஆண்களுக்கு பெண்கள் இளைத்தவர்கள் அல்ல என்பதினை நிரூபித்துக் காட்டியுள்ளார். மேலும் அடி வரிசை முறையில் கம்பை சுழற்றி எதிரி மீது வீசுவது ஆக்ரோசமாக மோதுவது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கச் செய்துள்ளது. மேலும் தனது மகள் தேனரசி 2 முறை மாவட்ட அளவில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் தற்போது இந்தாண்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளார்.
மேலும் கவினும் மாவட்ட போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார். அதிகாலையில் தனது குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்து அனுப்பவே போராடும் நிலையில் தானும் அதிகாலை எழுந்து தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு சிலம்ப பயிற்சி வகுப்பிற்கு சென்று தானும் சேர்ந்து பயிற்சி எடுத்து பின்னர் வீடு வந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதோடு தானும் வேலைக்கு செல்லும் துர்கா தேவி போன்ற சிங்கப்பெண்களால் தான் சாதனை குடும்பத்தை வழிநடத்த முடியும்.
தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்கிற பழமொழியை விடுத்து தாயும் குட்டியுடன் சேர்ந்து 16 அடி பாய்ந்து சாதனை படைத்து சீறிப்பாயும் சிலம்பக்குடும்பமாக திகழும் துர்கா தேவி குடும்பதார் சர்வதேச அளவில் சாதனை படைக்கப்போவது உறுதி. தமிழ்நாடு முதல்வர் பாரம்பரிய சிலம்ப விளையாட்டிற்கு அளித்த அதி முக்கியத்துவத்தினால் திராவிட மாடல் ஆட்சியின் வீர விளையாட்டாக சர்வதேச அளவில் சிறந்த கலையாக சிலம்பம் உயர்ந்து நிற்கிறது.