காலாவதியான கல்குவாரி.!.? கவிழ்ந்து நொறுங்கிய லாரி ! பலியான ஓட்டுநர் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கோடங்கி பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 38 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. மேலும் இத்தொழிலில் ஆயிரக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.மேலும் மாவட்டத்தின் கட்டுமானத்துறைக்கு தேவையான கற்கள் இப்பகுதியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் காரணம்பேட்டையில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. மாலை சுமார் 200 அடி ஆழத்தில் வெட்டி எடுக்கப்பட்ட கற்களை அதிகமாக ஏற்றிக்கொண்டு லாரி மேல் நோக்கி ஊர்ந்தபடி வந்துகொண்டிருந்தது. லாரியை ஒடிசாவை சேர்ந்த கஞ்சுசந்திரன் ஜெனா (40) என்பவர் ஓட்டிவந்துள்ளார். லாரி மேல் நோக்கி வந்துகொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
மேலும் விபத்தில் லாரியின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி ஓட்டுநர் கஞ்சுசந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்த ஓட்டுநரின் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சம்பவ இடத்தில் பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் குவாரியின் தகவல் பலகையில் அளிக்கப்பட்டுள்ள விபரங்களின் படி ராஜேந்திரன் என்பவர் குத்தகைதாரராக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் ஆணை ந.க.எண்: 126/கனிமம்/2018 நாள் : 8.9.2017 எனவும், க.ச எண் 158/24 ல் 1.20.5 எக்டேர் பரப்பளவுள்ள நிலத்தில் சாதரண கற்கள் மற்றும் கிரக்ஷர் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி தகவலின் படி ஆட்சியரின் ஆணை கடந்த 2022 செப்டம்பர் மாதமே காலாவதியாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும் காலாவதியான கல்குவாரியில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறதா? அவ்வாறு எடுக்கப்பட்டிருந்தால் அதை கண்காணிக்க வேண்டிய கனிமவளத்துறையினர் கண்காணிக்காமல் செயல்பட அனுமதித்தனரா என்கிற கேள்வி எழுகிறது.
மேலும் தற்போது ஓட்டுநர் உயிரிழந்திருக்கும் நிலையில் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.