காதலன் ஏமாற்றி பணம் சம்பாதித்ததால், காதலை துறந்த காதலி ! “லாக்கர்” படத்தின் திரைவிமர்சனம்
நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், விக்னேஷ் சண்முகம், நிரஞ்சனி அசோகன், நிவாஸ் ஆதித்தன், சுப்பிரமணியன் மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் ஆகிய இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் “லாக்கர்”.
கதைப்படி… தேர்தலில் மக்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லும் பணத்தை நண்பர்கள் துணையோடு கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கிறார் நாயகன் விக்னேஷ். பின்னர் பங்குச்சந்தை தொழிலில் ஈடுபட்டு சிலரை திட்டமிட்டு ஏமாற்றுகிறார்கள். இதற்கிடையில் நாயகி நிரஞ்சனி ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நாயகனை பணம் கொடுக்க வைத்துவிட்டு தப்பிச்செல்ல, அவரைப் பார்த்ததும் அவரது அழகில் மயங்கிய நாயகன் ஒருதலைப்பட்சமாக காதலிக்கத் தொடங்குகிறார். அதன்பிறகு நடைபெறும் பல சந்திப்புகளில் இருவரும் காதலர்களாகின்றனர். நாயகன் வீட்டிற்கு நாயகி வந்தபோது ஒரு அறையில் நிறைய பணம் இருக்கிறது. இந்த பணம் எப்படி வந்தது என நாயகனிடம் கேட்க, அடுத்தவரை ஏமாற்றி சம்பாதித்த பணம்தான் என நாயகன் கூற, இருவரும் சண்டையிட்டு பிரிகிறார்கள்.
நாயகி மீதுள்ள உண்மையான அன்பின் காரணமாக அந்த பணத்தை கொடுத்தவருக்கே கிடைக்குமாறு செய்கிறான். பின்னர் இருவரும் மீண்டும் காதலிக்க தொடங்குகின்றனர். இருவரும் இணைந்து ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு சிரித்து மகிழ்ச்சியாக இருக்கும்போது, எதிரே ஒருவரைப் பார்த்து கோபப்பட்டு டென்ஷன் ஆகிறார் நாயகி. ஏன் என்னாச்சு உனக்கு என நாயகன் விசாரிக்க, அவன் பெயர் சக்கரவர்த்தி ( நிவாஸ் ஆதித்தன் ). அதனால்தான் எனது குடும்பம் அழிந்தது, நான் அனாதை ஆனேன் என்கிறார். எனது குடும்பம் மட்டுமல்ல பல குடும்பங்களை அழித்துதான் அவன் பணக்காரனாக ஆனான். அவனை அழிக்க வேண்டும் என நாயகனிடம் அன்பாக கேட்க, இருவரும் சக்கரவர்த்தியை அழிக்க திட்டம் தீட்டுகின்றனர்.
சக்கரவர்த்தியை அழிக்க இவர்கள் போட்ட திட்டம் நிறைவேறியதா ? இல்லையா ? இவர்களின் காதல் நிறைவேறியதா ? என்பது மீதிக்கதை…
படத்தில் நாயகனாக நடித்துள்ள விக்னேஷ் புதுமுக நடிகர் என்றில்லாமல் தனது திறமையை வெளிப்படுத்தி கைதேர்ந்த நடிகராக நிரூபித்திருக்கிறார் என்றே சொல்லலாம். நாயகியாக நடித்துள்ள நிரஞ்சனி அசோகனும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகனின் நண்பர்களாக நடித்துள்ள இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இயக்குநர்கள் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், இந்தப்படம் வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும்.
சில இடங்களில் லாஜிக் இல்லாமல் இருந்தாலும், ரசிக்கும்படியாக அமைந்துள்ளது.