“நாற்காலி செய்தி” எதிரொலி… ஐ.ஜி.அஸ்ராகார்க் ஐபிஎஸ் அதிரடி நடவடிக்கை..! 400 கிலோ கஞ்சாவுடன் கடத்தல் மாஃபியா கும்பல் கைது..!
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஆட்சியில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகக் கூடாது என பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதுடன் போதைப் பொருளான கஞ்சா, கஞ்சா சாக்லேட், குட்கா போன்ற போதைப் பொருட்களை மறைமுகமாக விற்பனை செய்யும் சமூக விரோத கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 16/10/2022 அன்று நமது நாற்காலி செய்தி டாட்காம் இணையதளத்தில் கல்லூரி மாணவர் மாணவிகளின் நலன் கருதி ஒரு சமூக விழிப்புணர்வு கட்டுரையை கண்ணியமிகு தமிழக காவல்துறையின் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். தலைமையில் இயங்கி வரும் தென்மண்டல காவல்துறை ஐ.ஜி. அஸ்ராகார்க் ஐ.பி.எஸ். பார்வைக்கு சமர்ப்பித்திருந்தோம்.! அந்தக் கட்டுரையில் கஞ்சா போதையில் தள்ளாடும் கல்லூரி மாணவ மாணவிகள்..! அதிர்ச்சி தகவல்கள் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் ஐ.பி.எஸ். நடவடிக்கை எடுப்பாரா.? என செய்தி வெளியிட்டிருந்தோம்.
மதுரை தென்மண்டல காவல்துறை வட்டாரத்தில் நமது டாட்காம் செய்தி சலசலப்பை உருவாக்கினாலும், நமது கட்டுரையின் நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட போலீசார் உஷாரான நிலையில், கண்கொத்தி பாம்பாக கஞ்சா கடத்தல் மாபியா கும்பல்களை கைது செய்ய ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரைக்கு காரில் கஞ்சாவை மாபியா கும்பல்கள் கடத்திக் கொண்டு வருகிறார்கள் என்ற ரகசிய தகவல் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் ஐ.பி.எஸ்-ன் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் தனிப்படை காவல்துறையினருக்கு தெரியவர உடனே இத்தகவல் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி. பாஸ்கரன் ஐபிஎஸ் பார்வைக்குச் சென்றது. எஸ்.பி. யின் அறிவுறுத்தலின் படி திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முள்ளிப்பாடி, செட்டியபட்டி பிரிவு அருகே அவ்வழியாக வரும் வாகனங்களை தனிப்படை போலீசார் தீவிரமாக சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, மதுரையை நோக்கி மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த TN- 22 DF 3510 மற்றும் TN- 07 BF 7616 ஆகிய இரண்டு கார்களை மடக்கிய தனிப்படை போலீசார், காரில் இருந்தவர்களை கோழியை அமுக்குவது போல் ஒரே அமுக்காக பிடித்து தங்களது கஷ்டடிக்கு கொண்டு வந்தனர். பின்பு, இரண்டு கார்களை இன்ச் பை இஞ்சாக சோதனை செய்த பொழுது, அந்த இரண்டு கார்களிலும் 400 கிலோ கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கஞ்சா கடத்தல் பேர்வழிகளான சென்னையைச் சேர்ந்த பிரவீன் வயது 29 சதீஷ்குமார் வயது 26 சிவகங்கையை சேர்ந்த சரவணகுமார் வயது 27 ஆகிய மூன்று பேர்களிடம் அதிரடி விசாரணை செய்த போது மேற்படி நபர்கள் நாங்கள் தேனியில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரைக்கு கஞ்சாவை கடத்தி கொண்டு செல்கிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
கஞ்சா கடத்தல் பேர்வழிகளான பிரவீன், சதீஷ்குமார், சரவணகுமார், மீது திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கொண்டு வந்த 400 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்காக கொண்டு சென்றோம் என்று நம்மிடத்தில் செய்தி வாசிக்கிறார் நேர்மையான காக்கி சட்டை ஒருவர்.!
நாம் தேனி மாவட்டத்தில் விசாரணையை துரிதப்படுத்தி விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் நமக்கு கிடைத்தன.
தேனி, வருசநாடு, மூணாறு எஸ்டேட் வனப்பகுதிகளில் சில சமூக விரோத கும்பல்கள் கஞ்சாவை அரசுக்கு தெரியாமல் வனப்பகுதிகளில் சாகுபடி செய்து வருகிறார்கள். தற்போது, தேனி கஞ்சா சந்தையாக மாறிவிட்டது. அத்துடன், கஞ்சா வியாபாரிகளுக்குள் போட்டிகள் அதிகமாகி விட்டன. பூண்டு மூட்டைகளிலும், மிளகாய் மூட்டைகளிலும் கஞ்சாவை கடத்தி வந்த மாஃபியா கும்பல்கள் தற்போது, கார்களில் மூட்டை மூட்டையாக கடத்த ஆரம்பித்து விட்டனர்.
இந்த கஞ்சா வியாபாரிகளுக்கும் சட்ட விரோத செயலுக்கு துணை போகும் மீடியா புல்லுருவிகளின் அன்றாட நடவடிக்கையை ஐ.ஜி. தனிப்படை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தால், கஞ்சா கடத்தலுக்கு யார்.? மூளையாக செயல்படுகிறார்கள் என்பது வெளிச்சத்திற்கு வரும் என்று சமூக ஆர்வலர்கள் சிலர் நம்மிடத்தில் கூறுகிறார்கள்.
கஞ்சா கடத்தல் மாபியா கும்பலை பொறி வைத்து பிடித்த மதுரை தென்மண்டல காவல்துறை ஐ.ஜி. அஸ்ராகார்க் ஐ.பி.எஸ், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஜி. யின் தனிப்படை காவலர்களுக்கு நாற்காலி செய்தி டாட்காம் சார்பில் ஒரு ராயல் சல்யூட் ..
இந்திரஜித்