கொள்ளைபோகும் கொல்லிமலையின் வளங்கள் : விளைநிலங்களில் மணல் கொள்ளை!
மணல் கொள்ளையர்களால் ஆறுகள் பாலைவனமான நிலையில், விவசாய விளைநிலங்களை குறிவைத்து மணல் கொள்ளை நடைபெறுவதாக டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் தொண்டராயம்பாடி கிராமத்தில் ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள விளை நிலங்களில் 18 அடி ஆழத்திற்கு மேல் மணல் அள்ளப்படுவதாகவும் இதனால், விளை நிலங்கள் சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, நிலத்தடி நீர் மட்டமும், குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளைக் கைது செய்வது, வழக்கு போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் போலீசார், மணல் கொள்ளையர்களை கண்டு கொள்வதில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத் தடையை மீறி ஆறுகளில் அனுமதி இல்லாமல் இரவு பகலாக 1000-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளப்படுவதாகவும், மணல் கொள்ளைக்கு காவல் துறையினரும், வருவாய்த் துறை அலுவலர்களும் துணைபோவதாக விவசாய சங்கப் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
காவிரி ஆற்றுப்படுகையில் அள்ளப்படும் மண், செங்கல் சூளைகளுக்கு விற்பதை தடுக்கக்கோரிய வழக்கில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்த கலியபெருமாள் என்பவர் தாக்கல் செய்த மனுவில், காவிரி ஆற்றுப்படுகை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள கண்மாய்கள், கால்வாய்கள், தடுப்பணைகளில் உள்ள சவடு மண் எடுக்க கடந்த 2017-ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது என்றும், இந்த மண் விவசாயிகளுக்கும், பானை உற்பத்தியாளர்களுக்கும் மட்டுமே வழங்க வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அணைக்கு அருகேயும் மண் அள்ளுவதாகவும், இந்த மண் செங்கல் சூளைகளுக்கும், ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் விற்கப்படுவதாகவும், இரவில் மண் எடுப்பதாகவும், அதிக ஆழத்துக்கு மணல் அள்ளுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, அரசாணையில் கூறியபடி செயல்படுத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு, இந்த மனு தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் சட்டவிரோதமாக இயங்கி வரும் ஜல்லி கிரஷர் ஆலைகளை மூடி மலையின் வளத்தை பாதுக்காக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் கொல்லிமலையில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அரியவகை மூலிகைகள் நிறைந்த கொல்லிமலை வனப்பகுதியை பாதுக்காக்கப்பட்ட இடமாக அறிவித்துள்ளது தமிழக அரசு.
வனப்பாதுகாப்புச் சட்டம் நடைமுறையில் உள்ள கொல்லிமலையில் ஜல்லிகள் வெட்டி எடுக்கவோ, மண், மணல் உள்ளிட்டவற்றை அள்ளவோ அனுமதி கிடையாது. மலைமீது எந்த விதமான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டாலும் அடிவாரத்தில் இருந்தே பொருட்களை கொண்டு வர வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது.
ஆனால் இந்த விதிகளை காற்றில் பறக்கவிட்டு, வளப்பூர்நாடு, பெரியகோவிலூர், ஓலையாறு உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக ஜல்லி வெட்டியெடுக்கும் ஆலைகள் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மலையின் வளம் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர் ரவிக்குமாரிடம் கேட்டபோது, கொல்லிமலைப் பகுதியில் ஜல்லிக்கற்களை வெட்டியெடுக்கும் ஆலைகளுக்கு அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்றும் சட்டவிரோதமாக இயங்கி வருவதாகக் கூறப்படும் ஆலையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இயற்கை அன்னை அளித்த பெரும் கொடையான கொல்லிமலையின் அழகும் வளமும் சீர்கெட்டுவிடாமல் மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் என்பதே நாமக்கல் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- தே.முத்துப்பாண்டி, G.செந்தில்குமார்