தமிழகம்

ரூ 2411 கோடி டெண்டர் முறைகேடு… : பின்னணியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..?

தமிழ்நாடு சைபர் நெட் கார்பரேசன் நிறுவனம் மூலம் 12,524 கிராம ஊராட்சிகள், 528 பேரூராட்சிகள், 121 நகராட்சிகள், 15 மாநகராட்சிகள் அனைத்தையும் கண்ணாடி இழை கட்டமைப்பு (Optic Fibre Infrastructure) மூலம் இணைக்க கோரப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த தகவல் நமக்கு கிடைத்ததை ஒட்டி நமது குழுவினர் இது சம்பந்தமாக என்னதான் அந்த புகாரில் இருக்கிறது என்று விசாரிக்கையில்..

தமிழக அரசின் தமிழ்நாடு பைபர் நெட் கார்பரேசன் நிறுவனம் எட்டு ஐஏஎஸ் அதிகாரிகளை இயக்குநர்களாக கொண்டு 8.6.2018 ல் மத்திய அரசின் Ministry of corporate affairs (MCA)ல் ரூ 50 லட்சம் முதலீடு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டதாம். இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசின் தொலை தொடர்புத்துறை, Bharat Broadband Network Ltd (BSNL), தமிழ்நாடு அரசு ஆகியவற்றுக்கும் இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் 25.4.2017 ல் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டது. தமிழகத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகள், 528 பேரூராட்சிகள், 121 நகராட்சிகள், 15 மாநகராட்சிகள் அனைத்தையும் அதிவேக அலைக்கற்றை மற்றும் தடைஇல்லா இன்டெர்நெட் இணைப்புக்கான உள்கட்டமைப்பு ஏற்படுத்த ரூ 2411 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 சந்தோஷ்பாபு, ஹன்ஸ்ராஜ் வர்மா

மத்திய அரசின் பாரத்நெட் திட்டம் மாநில அரசின் தமிழ் நெட் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பு உருவாக்கப்படும். இத்திட்டம் 18 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று 24.9.2019 ல் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். இதற்காக தமிழ்நாடு பைபர் நெட் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக சந்தோஷ்பாபு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

அதன்பிறகு ரூ 2411 கோடிக்கான டெண்டர் பேக்கேஜ் A, B, C, D என நான்காக பிரித்து 6.12.2019 ல் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டருக்கான பிரிபிட் மீட்டிங் 23.12.2019 நடப்பதாக இருந்தது. ஆனால் 20.12.2019 அன்று பிரிபிட் மீட்டிங் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் தான் மேலாண்மை இயக்குனர் சந்தோஷ்பாபு ஐஏஎஸ் அதிகாரிக்கும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. டெண்டரில் கமிஷன் பெற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் விரும்புகிறார்கள் என தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் எனக்குத் தெரியாமல் றிக்ஷீமீ-Pre-Bid Meeting  23.12.2019 ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை கேட்டு முறையிட்டிருக்கிறார் மேலாண் இயக்குநர் சந்தோஷ்பாபு ஐஏஎஸ். அதற்கு எனக்குத் தெரியாது வேண்டுமானால் முதல்வரிடம் கேட்டுக் கொள் என்று அலட்சியமாக பதில் சொல்லியிருக்கிறார். அமைச்சர் உதயகுமார் டெண்டர் விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போட வேண்டும் என்று கூறினாராம். டெண்டரில் முறைகேடு நடக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறி அமைச்சர் அறையிலிருந்து வெளியேறி விட்டாராம் சந்தோஷ்பாபு ஐஏஎஸ்.

இந்த விவகாரம் எடப்பாடி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாம். தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் ரூ 2411 கோடி டெண்டரில் முறைகேடு நடப்பதற்கு பேரம் பேசப்படுவதாக புகார் தெரிவித்திருக்கிறார். தலைமைச் செயலாளர் சண்முகமோ இந்த விவகாரத்தில் முதல்வரின் செயலாளர் விஜயகுமார் ஐஏஎஸ் இந்த டெண்டர் முறைகேட்டின் பின்னணியில் இருப்பதால் நடவடிக்கை எடுக்க இயலாத சூழ்நிலையில் சந்தோஷ்பாபு ஐஏஎஸ் அதிகாரியை விருப்ப ஓய்வில் செல்லுமாறு மெயில் அனுப்பியிருக்கிறார். இந்நிலையில் தான் சந்தோஷ்பாபு ஐஏஎஸ் மாற்றப்பட்டார்.

தமிழ்நாடு பைபர் நெட் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்திற்கு 2019ல் ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு பெற்ற ஐஏஎஸ்லேயே ஜூனியர் அதிகாரியான டி.ரவிச்சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இவர் மாவட்ட ஆட்சித்தலைவராக கூட பணியாற்றிய அனுபவம் இல்லாதவர்.

டெண்டர் ஆவணங்களில் 23.12.2019 ல் Pre Bid Meeting ரத்து செய்யப்பட்ட நிலையில் 23.12.2019 ல் கூட்டம் நடந்ததாக தற்போது உள்ளது. இதுவே முறைகேடு நடப்பதற்கான முதல் அறிகுறி.

தமிழ்நாடு டெண்டர் டிரான்ஸ்பரன்சி சட்டம் 1998ன் படி டெண்டர் கோரப்பட்ட நாளில் இருந்து 15 நாட்கள் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் டெண்டர் திறக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அதிகபட்சமாக 45 நாட்கள் எடுத்துக் கொண்டால் கூட 21.1.2020 ல் டெண்டர் திறக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்டத்தை மதிக்காமல் டெண்டர் திறக்கும் தேதி 21.2.2020 என்று நீட்டித்துள்ளார்கள். 20.2.2020 வரை டெண்டர் சமர்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்கள். இந்த டெண்டர் விவகாரத்தில் கமிஷன் கொடுக்கும் நிறுவனத்திடம் பேரம் பேசி லஞ்சம் வாங்குவதற்காகவே டெண்டர் தேதி விதிமுறைகளை மீறி மேலும் 30 நாட்கள் நீட்டித்துள்ளார்கள்.


ரூ 2411 கோடிக்கான டெண்டரில் ரவிச்சந்திரன் ஐஏஎஸ்- ஐ தமிழ்நாடு பைபர் நெட் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டதை பார்க்கும்போது கண்டிப்பாக ஊழல் நடைபெற வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. இந்த டெண்டரில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதல்வரின் செயலாளர் விஜயகுமார் ஐஏஎஸ் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் முறைகேடு நடப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி உள்ளார்கள். ஆகையால் இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும். இதற்கு பின்னணியில் இருக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதல்வரின் செயலாளர் விஜயகுமார் ஐஏஎஸ், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்குத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த புகார் மனுவில் கூறியிருக்கிறார்கள்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி ரூ 2411 கோடி டெண்டரில் ஊழல் நடைபெறாமல் தடுத்து நிறுத்துவார்களா? அல்லது இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்று இந்த டெண்டர் நிறுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button