50 ஆண்டுகால ஆக்கிரமிப்பை துணிச்சலாக அகற்றிய ஊராட்சி மன்றத் தலைவர் !
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் வேடபட்டி ஊராட்சியும் ஒன்றாகும். வேடபட்டி ஊராட்சியின் ஊராட்சிமன்ற தலைவர் துக்கைவேல் இவர் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அப்போதைய அதிமுகவையும், எதிர் கட்சியான திமுகவையும் எதிர்த்து சுயேட்சையாக களம் இறங்கி பொதுமக்களின் அமோக வரவேற்பையும், நன்மதிப்பையும் பெற்றவராவார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இரு பெரும் கட்சிகளால் தேர்தலில் இறக்கி விடப்பட்ட வேட்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தான் துக்கைவேல்.!
தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு பல்வேறு போட்டிகளுக்கு மத்தியில் மக்களின் பேராதரவைப் பெற்று ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் வெற்றியும் பெற்றார். ஊராட்சிமன்ற தலைவராக அவர் மட்டும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் தன்னுடன் களம் இறங்கிய அத்தனை வார்டு கவுன்சிலர்களையும் வெற்றி பெறவும் செய்திருக்கிறார். சிறிய ஊராட்சியாக இருந்தாலும் தனது நிர்வாகத்தை மிகச்சரியாக கொண்டு செல்லும் வேடபட்டி ஊராட்சிமன்ற தலைவர் துக்கைவேல் தனது கிராமத்திற்கு அடிப்படை தேவைகளான குடிநீர், தெரு விளக்குகள் அமைப்பது, நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மக்களுக்கு அதிகமான வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதும் வேடபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் திருமூர்த்திமலை குடிநீர் குழாய் அமைத்துக் கொடுத்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
என்னதான் சமூக நீதி பேசினாலும் இன்றும் தமிழகத்தில் பல இடங்களில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகள் முழுமையாக மறுக்கப்படுவதை என்றும் மறைக்கவும் மறுக்கவும் முடியாத ஒன்று.! அப்படி ஒரு சூழல் தான் மடத்துக்குளம் ஒன்றியம் வேடபட்டி ஊராட்சியில் கடந்த 50 ஆண்டுகளாக நீடித்து வந்தது. ஆதி திராவிடர் காலனி மக்களின் முக்கிய வழித்தடமான பட்டத்து அரசி அம்மன் கோவில் அருகில் உள்ள தலைவாசல் பகுதியில் மிகவும் மோசமான நிலையிலிருந்த வழித்தடமும், அந்த வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளும் பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் இருந்து வந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆதி திராவிடர் மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத நிலையில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சிமன்ற தலைவர் துக்கைவேல் நேரடியாக சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மீட்டு 50 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தை ஆதி திராவிடர் மக்களுக்கான பாதையை மீட்டுக் கொடுத்துள்ளார் துக்கைவேல்
ஆக்கிரமிப்புகளை அகற்றிய கையோடு கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும் தொடங்கி தற்போது முடியும் தருவாயில் இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த வினீத் ஐஏஎஸ் வேடபட்டி ஊராட்சியை ஆய்வு செய்த பிறகு வேடபட்டி ஊராட்சியை முன் மாதிரி ஊராட்சியாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வேடபட்டி ஊராட்சியின் தலைவராக உள்ள துக்கைவேல் ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதிலும் ஆர்வம் காட்டுவதை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.