சினிமா

“ப்ரின்ஸ்” படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பு

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘ப்ரின்ஸ்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் அக்டோபர் 21 அன்று வெளியாகும் இந்தப் படத்தினை அனுதீப் இயக்கத்தில், தமன் இசையமைத்திருக்கிறார். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன், கதாநாயகி மரியா, இயக்குநர் அனுதீப், நடிகர்கள் சுப்பு, ’ப்ராங்ஸ்டர்’ ராகுல், ‘பைனலி’ பாரத், ‘கோபுரம் சினிமாஸ்’ அன்புச்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

யூடியூபரும் நடிகருமான ‘ப்ராங்ஸ்டர்’ ராகுல் பேசியதாவது, “இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அனுதீப் சார், சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு நன்றி. உண்மையிலேயே இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். பல வருடங்களாக நானும் பாரத்தும், உங்களை மோட்டிவேஷனாக பார்த்துள்ளோம் உங்களை சந்திக்க முடியுமா உங்களுடன் நடிக்க முடியுமா என்று எல்லாம் யோசித்து இருக்கிறோம். ஆனால், இன்று உங்களுடன் படம் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் எனக்கு நல்ல ரோல் இருக்கிறது. இந்த வாய்ப்பு கொடுத்த என்னுடைய சப்ஸ்கிரைபர்களுக்கு நன்றி. இந்தப் படத்தில் நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன் சிவகார்த்திகேயன் உடன் பழகிய போது அவர் கதாநாயகன் என்ற தலைகணம் இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்ததை பார்த்து நான் அதிர்ச்சியாகி விட்டேன். அன்பான அண்ணனை போல்தான் எங்களுடன் பழகினார். எல்லோருக்கும் நன்றி! தீபாவளியன்று ’ப்ரின்ஸ்’ படத்தைப் பாருங்கள்” என்று பேசினார்.

நடிகர் சுப்பு பஞ்சு பேசியதாவது, “சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே ஜாலியாகதான் இருக்கும் ஆனால் ’ப்ரின்ஸ்’ திரைப்படம் நாம் எதிர்பார்க்காத வேறு விதமாக அருமையாக வந்திருக்கிறது சினிமாவில் ஒவ்வொரு காலத்திலும் ஒரு காமெடி படம் ட்ரெண்ட் செட்டிங் படமாக இருந்திருக்கிறது ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இந்த வரிசையில் ’ப்ரின்ஸ்’ திரைப்படமும் ட்ரெண்ட் செட்டிங் காமெடி படமாக இருக்கும். சிவகார்த்திகேயனுகும் அனுதீபுக்கும் நன்றி. எதிர்பார்க்காத பல இடங்களில் நகைச்சுவையை வேறு விதமாக அனுதீப் வைத்திருந்தார். அதை நாங்கள் அனைவரும் ரசித்தது போல பார்வையாளர்களும் நிச்சயம் படத்தை பார்க்கும் போது ரசிப்பீர்கள்” என்றார்.

‘ஃபைனலி’ பாரத் பேசியதாவது, ” முதலில் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அனுதீப் சாருக்கு நன்றி. என்னையும் படத்தில் அவர் நண்பராக ஏற்றுக் கொண்டு நான் பார்த்து இன்ஸ்பையரான சிவகார்த்திகேயன் அண்ணனுக்கும் நன்றி. சத்யராஜ், ப்ரேம்ஜி என எல்லா சீனியர் நடிகர்களும் என்னை ஒரு புது பையன் என்று நடத்தாமல் அக்கறையாக பார்த்துக் கொண்டார்கள். அனைவருடனும் நான் நடித்த காட்சிகள் எல்லாமே ஜாலியாக இருக்கும். என் நண்பன் ராகுலுடன் இணைந்து முதல் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. இதுவரை நிறைய காமெடி படங்கள் வந்திருக்கும். ஆனால், இது ஒரு புதுவிதமான காமெடி முயற்சி. சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு இப்போது இருக்கும் மார்க்கெட்டுக்கு அவர் வேறுவிதமான மாஸ் பாடங்களை முயற்சி செய்யலாம் ஆனால் இப்படி ஒரு வித்தியாசமான காமெடி படம் முயற்சி செய்தது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது” என்றார்.

‘கோபுரம் சினிமாஸ்’ அன்புச்செழியன் பேசியதாவது, “’பிரின்ஸ்’ திரைப்படம் ஏறக்குறைய 650 திரையரங்குகளில் தமிழ்நாட்டில் மட்டும் வெளியாக இருக்கிறது. சிவாவின் மற்ற படங்களை போல இந்த படமும் வெற்றி பெற்றுவிடும். தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த ஹீரோவாக ஒரு சிலர் இருப்பார்கள். மறைந்த எம்ஜிஆர் ஐயா அவர்கள், பின்பு ரஜினி சார், விஜய் சார் அந்த வரிசையில் இன்று சிவகார்த்திகேயன் ஹீரோவாக இருப்பது மகிழ்ச்சி. இந்த தீபாவளி சிவகார்த்திகேயன் தீபாவளி என்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோல நிறைய வெற்றி படங்களை கொடுக்க வாழ்த்துக்கள்”

படத்தின் கதாநாயகி மரியா பேசியதாவது, ” இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு முதலில் அனுதீப் சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஸ்பெஷல் தேங்க்ஸ் சிவா சாருக்கு. அவருடன் வேலை செய்வது என்பது மிகவும் எளிமையான ஒன்று. எல்லாருமே என்னிடம் மிகவும் நன்றாக பழகினார்கள். உங்கள் அன்புக்கு நன்றி. இந்தப் படம் மிகவும் ஜாலியான பார்த்து ரசிக்க கூடிய ஒரு திரைப்படம்” என்றார்.

இயக்குநர் அனுதீப் பேசியதாவது, “என்னுடைய முந்தைய படமான ‘ஜதி ரத்னலு’ முடித்துவிட்டு இதன் திரைக்கதை எழுதும்போது சிவா சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சிவா சாருக்கும் என்னுடைய ’ஜதிரத்தினலு’ படம் பார்த்து பிடித்திருந்தது. அவரிடம் பேசும் பொழுது காமெடி மட்டும் இல்லாமல் நல்ல மெசேஜ் இருக்க வேண்டிய கதையாக வேண்டும் என்றார். இந்த படம் ஒரு பண்டிகை மூடில் எல்லோரும் சிரித்து கொண்டாடும் விதமாக வந்துள்ளது. இதற்கு முன்பு பாரதிராஜா, பாலச்சந்தர் ஆகியோரின் நிறைய தமிழ் படங்களை பார்த்து இருக்கிறேன். எனக்கும் ஒரு தமிழ் படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இந்த வாய்ப்பை இவ்வளவு சீக்கிரம் கொடுத்த சிவா சாருக்கு நன்றி. தீபாவளியன்று எல்லோரும் திரையரங்குகளில் இந்த பாடத்தை பார்த்த மகிழுங்கள்” என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “’ப்ரின்ஸ்’ படத்தைப் பொருத்தவரை இது ஒரு எளிமையான கதை. இந்திய பையன் ஒருவன் ப்ரிட்டிஷ் பொண்ணை காதலிக்கறான் என்ற ஒரு வரிதான். இதில் அனுதீப் கொடுத்திருக்கும் காமெடி விஷயங்கள்தான் இந்தப் படத்தை பொருத்தவரை நாங்கள் புதிய விஷயமாக பார்க்கிறோம். காமெடி கவுண்ட்டர்கள் என்றில்லாமல், நாம் பேசும்போது சம்பந்தமே இல்லாத வேறொரு பதில் சொல்வது என கதை நகரும். நாங்கள் இந்தப் படத்தில் காட்டியுள்ள ஊர் தமிழ்நாட்டில் எங்குமே கிடையாது. அனுதீப் உருவாக்கிய ஊர் அது. அந்த மக்கள் அனைவரும் அவர்கள் சிந்திப்பதுதான் சரி என்று யோசிப்பார்கள்.
அப்படியான ஊரில் இருக்கக்கூடிய ஒருவனுக்கு வரும் லக், பிரச்சனைகள் அதை அவன் எதிர்கொள்ளும் விதம் இவைதான் படம். படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. எல்லாருக்கும் பிடிக்கும்படியான ஜாலியான படம் இது. தீபாவளிக்கு குடும்பங்களாக பார்க்கும்படியான எண்டர்டெயின்மெண்ட்டான படம். இன்னொரு பக்கம் கார்த்தியின் ‘சர்தார்’ படம் வெளியாகிறது. இரண்டு படங்களும் முற்றிலும் வேறான கதைக்களம். இரண்டு படங்களின் வெற்றிக்கும் வாழ்த்துகள். அனுதீப் தெலுங்கில்தான் யோசிப்பார். இதை தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளுக்கு ஏற்ற மாதிரி கொண்டு போய் சேர்ப்பதுதான் எங்கள் முன் இருந்த சவால். தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்னால் அக்டோபர் 21 அன்று வெளியாகிறது. தீபாவளி அன்று வெளியாகும் என்னுடைய முதல் படம் இது. இதற்கு முன்னால் சின்ன வயதில் இருந்து 20 வருடங்களாக தீபாவளி அன்று வெளியாகும் அனைத்து ஹீரோக்களின் படங்களையும் பார்த்திருக்கிறேன். இப்போது என்னுடைய படத்தைப் பார்க்க போகிறேன் என்பது மகிழ்ச்சி” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button