சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள்… : வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்துக்கு தலைவர்கள் கண்டனம்…
வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ரவி, பத்தாயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று பேசியிருந்தார். உயிர் நேயம் பற்றி அதிகமாக பேசியிருந்த வள்ளலாரை சனாதனத்துடன் தொடர்புபடுத்தி ஆளுநர் பேசியது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வடலூரில் நடைபெற்ற வள்ளலார் 200-வது ஜயந்தி விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, “10,000 வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களைப் படித்தவன். வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது மிக பிரமிப்படைந்தேன். அடிப்படையில் உண்மை என்பது ஒரே பரமேஸ்வரன். அவன் படைத்த மனிதன், விலங்குகள், செடி, கொடிகள் என அனைத்தும் ஒரே குடும்பம். இங்குள்ள நூற்றுக்கணக்கான மக்களின் உடையும், தோற்றமும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், உங்களில் என்னையும் என்னில் உங்களையும் காண்பதுதான் சனாதன தர்மம்.
`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்னும் வள்ளலாரின் வரிகள் சனாதன தர்மத்தின் எதிரொலி. அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக சனாதன தர்மத்தைச் சிலர் தவறாக நினைத்திருக்கின்றனர். 200 ஆண்டுகளுக்கு முன் காரிருளை நீக்க வந்த ஜோதிதான் வள்ளலார். ஆங்கிலேயரின் கடுமையான சுரண்டலுக்கு நமது நாடு உள்ளானபோது தோன்றியவர்தான் வள்ளலார். நமது பாரதம் சனாதன தர்மத்தால் ஆனது. ஆயிரக்கணக்கான மார்க்கங்கள் இருந்தபோதும் புதியதாக வெளிநாட்டிலிருந்து வந்த வழிபாட்டு முறையால் நமது அடையாளம் மறைந்து போனது.
இந்திய பண்பாட்டில் சிறு தெய்வம், பெரும் தெய்வ வழிபாடு இருந்தது. ஆனால், ஒருவரும் சண்டையிட்டுக்கொண்டதில்லை. வெளியிலிருந்து புதியதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் பெரிது என்று கூறியபோதுதான், பிரச்னை உருவானது. பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள்” என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில், ஆளுநரின் இத்தகைய பேச்சால் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில், `சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்துக்குமான அடிப்படை வேற்றுமையைக்கூட அறிந்துகொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமான் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியைப் புகுத்தும் முயற்சியில்,
தர்ம ரட்சராக’ புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர்.
தமிழ்ப் பண்பாடும், விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பைக்கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரிகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தியிருக்கின்றன. ஒன்றிய அரசின் `தனிப்பெருங் கருணை’ ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே ஆளுநர் மாளிகையைச் சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை” என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ட்விட்டர் பதிவில், ‘மதித்த சமயதம் வழக்கெல்லாம் மாய்ந்தது.. வர்ணாசிரமெனும் மயக்கமும் சாய்ந்தது” என்று சனாதனத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதனத்தின் உச்சநட்சத்திரம் என்கிறார்ஆளுநர். ஆளுநர் அவர்களே வள்ளுவரும் வள்ளலாளரும் நீங்கள் விழுங்கவே முடியாத கலகக்குரல்கள். மட்டுமல்ல சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.