சாதிய வன்மத்துடன் செயல்படும் களக்காடு காவல் நிலைய காவலர்..?.!
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுனராக பணிபுரியும் பிரபாகர் என்பவர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணம் கொடுக்காவிட்டால் உன்னை ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன். நீ இப்பதான் கல்யாணம் பண்ணியிருக்க பார்த்துக்கோ, நீ பணம் கொடுத்துவிடுவாய் என அதிகாரிக்கு வாக்கு கொடுத்துட்டேன் பார்த்துக்கோ.. என மிரட்டுவதோடு நீண்டு கொண்டே போகிறது அந்த ஆடியோ….
இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட நபரிடம் விசாரித்த போது… நான் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். கடந்த 29 ஆம் தேதி எங்கள் ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவின்போது கரகாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இரவு 12 மணிக்கு எனக்கு போன் செய்து உடனடியாக கரகாட்டத்தை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் பத்தாயிரம் ரூபாய் உடனே கொடுக்க வேண்டும். நீ என்ன செய்வியோ ஊர்க்காரர்களிடம் பேசி யார் காலில் விழுந்தாவது பணத்தை கொடு, இல்லை என்றால் உனது காரை தூக்கி விடுவேன் என மிரட்டினார் ( அந்த ஆடியோவும் நம்மிடம் கொடுத்துள்ளார் ) என்றார்.
மேலும் கூறுகையில்… கடந்த 23 ஆம் தேதி இரவு நேரத்தில் ஒரு லாரியை மறித்து பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் தான் லாரியை விடுவேன் என மிரட்டினார். அந்த லாரி எனது உறவினர் லாரி என்பதால் உடனடியாக ரூபாய் ஜந்தாயிரம் கூகுள் பே மூலம் அனுப்பிய பிறகுதான் அந்த லாரியை விடுவித்தார்.
இதேபோல் கடந்த மே மாதம் எங்கள் ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவின்போது ஏற்பட்ட சண்டையின் போது, எனக்கும் அந்த சண்டைக்கும் துளியளவும் சம்பந்தம் இல்லாத போது, என்னையும் அந்த சண்டையில் ஈடுபட்டதாக கூறி உன்மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமானால் 30,000 கொடு என என்னை மிரட்டி பெற்றுக் கொண்டார். அப்போது ஆறாயிரம் கூகுள் பே மூலமும் மீதித்தொகையை ரொக்கமாகவும் கொடுத்தேன் என்றார்.
மேலும் களக்காடு பகுதியில் அனுமதி இல்லாத செங்கல் சூளை நடத்துபவர்கள், ரேசன் அரிசி நடத்துபவர்கள் என அனைவரிடமும் மாதாமாதம் அதிகாரிகள் பெயரைச் சொல்லி வசூல் வேட்டை நடத்தி வருகிறார். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னை ஜாதிய வன்மத்துடன் துன்புறுத்தி வருகிறார் என கூறியதோடு இதுவரை ஆய்வாளரின் ஓட்டுனர் பிரபாகரனுக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்பியதற்கான ஆதாரங்களையும், பிரபாகரன் பணம் கேட்டு மிரட்டிய ஆடியோவையும் நமது செய்தியாளரிடம் கொடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக களக்காடு பகுதியில் விசாரித்தபோது… ஏற்கனவே திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் காவல்துறையினர் மீது சமீப காலமாக ஏராளமான புகார்கள் குவிந்து வரும் நிலையில், நீதிமன்றங்களும் அடிக்கடி கண்டித்து வருகிறது. களக்காடு காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் பிரபாகரை பணம் வசூல் செய்யச் சொன்னாரா? அல்லது ஆய்வாளர் பெயரைச் சொல்லி பிரபாகர் தன்னிச்சையாக வசூல் வேட்டை நடத்துகிறாரா ? மாவட்ட கண்காணிப்பாளர் தான் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.