சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா வேலங்குடி குரூப்பில் உள்ள வி.மலம்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்கண்ணன், அந்தோணிச்சாமி ஆகிய இருவரின் பட்டா நிலங்களில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து செய்தியாளர்கள் இது சம்பந்தமாக செய்தி சேகரிக்கச் சென்றனர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்களை சொல்லி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள்.
எங்கள் பகுதியில் பெருமளவில் பாறைகளும், செம்மண்ணும்தான் இருக்கிறது. இந்தப் பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களில் செம்மண் மற்றும் கிராவல் மணல் கடத்தல் அதிகமாக நடக்கிறது. இதேபோல் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஜெலட்டின் குச்சி எனப்படும் வெடிபொருளை பயன்படுத்தி கருங்கல் பாறைகளை உடைத்து கடத்துகிறார்கள். எங்கள் பகுதிகள் இந்த குவாரிகளில் வெடிவைத்து பாறைகளை உடைக்கும்போது அதிர்வலைகள் அதிகமாக இருப்பதால் வீடுகளில் கிராக் ஏற்பட்டு வீடுகள் இடிந்துவிழும் நிலையில் உள்ளன. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மணலையும், கற்களையும் திருடிச்செல்லும் லாரிகள் வேகமாக செல்வதால் விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் கனிமவள அதிகாரிகள் என சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அலுவலக அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தும் இதுவரை யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த குவாரி திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான பெரியகருப்பனுக்குச் சொந்தமானதாகும். பணபலமும், அரசியல் பலமும் அவருக்கு இருப்பதால் அதிகாரிகள் சட்டவிரோதமாக கனிமவளத்தை கொள்ளையடிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்.
ஏற்கனவே மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் பிஆர்பி நிறுவனம் அதிக அளவில் கிரானைட் குவாரிகள் அமைத்து கனிம வளங்களை சுரண்டியது. இதேபோல் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும், அளித்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசும், நீதித்துறையம் தலையிட்டு அந்தப் பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெற்ற கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்தி நிரந்தரமாக மூடியது. அதேபோல் திருப்பத்தூர் தாலுகாவிலும் அரசு நிர்ணயித்த அளவுக்குமேல் நிலத்தை தோண்டி கனிமங்களை சுரண்டிய கொள்ளைக் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களையும் கனிம வளங்களையும் பாதுகாக்க வேண்டுகிறோம் என்று கூறினார்கள்.
இந்த சமயத்தில் முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான பெரிய கருப்பனின் உதவியாளர் இளங்கோவன் தூண்டுதலால் இருபதுக்கும் மேற்பட்ட நபர்கள் செய்தி சேகரித்த செய்தியாளர்களின் கேமராவை பிடுங்கி வைத்துக் கொண்டு அடித்து விரட்டியுள்ளனர். இதுசம்பந்தமாக வி.மலம்படடி காவல் ஆய்வாளரிடம் புகார் கொடுத்தபோது அந்த குவாரிகள் எம்எல்ஏ குவாரி அதைப்பற்றி புகார் கொடுக்கிறீர்கள் சரி பார்க்கலாம் என்று செய்தியாளரை அனுப்பி இருக்கிறார். இந்தப் புகார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இயற்கை வளங்களை சுரண்டும் கொள்ளைக் கும்பலிடமிருந்து இந்த மண்ணையும் மண்சார்ந்த மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் ஆட்சியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இருக்கிறது என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதே இந்தப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர்.
- ராதாகிருஷ்ணன்