பல்லடம் கல்குவாரி விதிமீறல்.. அரசு அதிகாரிகள் மௌனம்..?..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையத்தில் சுமார் 30 திற்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரசர் யூனிட்கள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் கல்குவாரிக்கு உரிமம் வழங்கியதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறி விவசாயிகள் தனிநபர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் கோடங்கிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அப்பகுதியில் துவங்கப்பட்டுள்ள கல்குவாரி மற்றும் கிரசர் யூனிட்டால் பாதிப்பு ஏற்படுவதாகவும், அதனை அகற்றகோரி கடந்த 12 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனிடையே கல்குவாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி 10 திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கனிமவளத்துறை தனித்துணை வட்டாட்சியர் பெரியசாமி, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட செந்தில்குமார் குடியிருக்கும் வீடு அங்கீகரிக்கப்படவில்லை என தெரிவித்தனர். அப்போது அங்கிருந்த விவசாயிகள் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் செந்தில்குமார் வீடு கட்டி குடியிருந்து வருவதாகவும் அதற்கு உண்டான வீட்டுவரி செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் 155 மீட்டரில் செந்தில்குமார் வீடு தொழில்சாலை கடந்த 2006 ஆண்டு முதல் இருப்பதாகவும், அருகே தொகுப்பு வீடு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மனைபிரிவுகள் உள்ளதாகவுன் அதனை மறைத்து 500 மீட்டருக்கு வீடோ, வீட்டுமனைகளோ இல்லை என தடை இல்லா சான்றை கனிம வளத்துறை வழங்கியுள்ள அதிர்ச்சி தகவலை விவசாயிகள் கூட்டத்தில் ஆதாரத்துடன் காட்டி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பல்வேறு விதிமுறைகளை சுட்டிக்காட்டி சராமாரியாக விவசாயிகள் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காததால் இரவு முதல் விடிய விடிய வட்டாட்சியர் அலுவலக அறையிலேயே காத்திருப்பு போராட்டத்தில் 5 பெண்கள் உட்பட 15 பேர் ஈடுபட்டனர். போராட்டத்திக் ஈடுபட்டவர்கள் முறையற்ற வகையில் கனிம வளத்துறை அனுமதி வழங்கியுள்ளதாகவும், அனுமதி வழங்கிய மணியக்காரர் முதல் அதிகாரி வரை சஸ்பென்சாக செயல்பட்டு அருகில் குடியிருந்து வருபவர்களிடம் கருத்துக்கேட்பு நடத்தாமல் அனுமதி வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டினர்.
மேலும் சம்பந்தப்பட்ட கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இந்நிலையில் காலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பிற்காக போலீஸ் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல போலீசார் வலியுறுத்தியதை அடுத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதிகாரிகளின் சஸ்பென்ஸ் நடவடிக்கையால் தற்போது விவசாயிகள் வீதிக்கு வந்து போராடக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இப்போதைய தேவை அரசின் அதிரடி நடவடிக்கை என்பதே அனைவரின் கோரிக்கை.