உதவி பேராசிரியர் பாலியல் தொல்லை போலீஸ் நடத்தும் விசாரணை ஒருதலைபட்சமாக உள்ளது
வேளாண் கல்லூரி மாணவி புகார்
திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் உதவி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணை ஒருதலைபட்சமாக உள்ளது என்று பாதிக்கப்பட்ட மாணவி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரி விடுதியில் தங்கி, பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்த சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவி, தனக்கு கல்லூரி உதவி பேராசிரியர் தங்கபாண்டியன்(40) பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதற்கு பேராசிரியை புனிதா, விடுதி வார்டன் மைதிலி ஆகிய இருவரும் உடந்தையாக இருந்ததாகவும் புகார் கூறினார். இதையடுத்து, திருவண்ணாமலை நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி அநத கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர், மாணவி அளித்த வாக்குமூலத்தை புகார் மனுவாக எஸ்பி சிபிசக்கரவர்த்திக்கு அனுப்பி வைத்து, கல்லூரி முதல்வர், உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் உதவி பேராசிரியை புனிதா, விடுதி வார்டன் மைதிலி ஆகிய 4 பேரிடமும் விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 23ம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎஸ்பி வனிதா அரசு வேளாண்மை கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 24ம் தேதி வேளாண்மை பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழுத்தலைவர் சாந்தி தலைமையில் விசாரணை நடந்தது. மாணவியை ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு அழைத்தபோது, அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பாலியல் புகாருக்கு ஆளான உதவி பேராசிரியர் தங்கபாண்டியனை கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தது. மாணவியும் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து, மாணவி மற்றும் அவரது பெற்றோரிடம் திருவண்ணாமலை எஸ்பி அலவலகத்தில் ஏடிஎஸ்பி வனிதா விசாரணை நடத்தினார். பின்னர், நடந்த சம்பவம் குறித்து மாணவியிடம் எழுத்துப்பூர்வமாக போலீசார் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர். இந்த விசாரணை சுமார் 4 மணிநேரம் நடைபெற்றது.
விசாரணை முடிந்து வந்த மாணவி நிருபர்களிடம் கூறியதாவது: விசாரணையின்போது போலீசாரின் கேள்விகள் ஒருதலைபட்சமாக இருந்தது. விசாரணை எனக்கு திருப்திகரமாக அமையவில்லை. நான் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இதுகுறித்து, நீதிமன்றத்தில் தெரிவித்து அனுமதி பெற்ற பின்னர் தான் கலந்து கொள்வேன் என தெரிவித்தேன். இதற்கிடையில், இந்த புகார் தொடர்பாக எனக்கு உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் தரப்பிலிருந்து சமாதானம் பேச வந்தார்கள். அதனை புறக்கணித்துவிட்டேன்.
மேலும் விசாரணையின்போது, எனக்கு நடந்த கொடுமைகளை முழுமையாக போலீசில் தெரிவித்தேன். எழுத்துப்பூர்வமாகவும் , ஆடியோ ஆதாரங்களையும் ஒப்படைக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
– ஹாஜி அ.மு.முஸ்தாக் அகமது