இசைக் கலைஞனின் உல்லாசம்.!? “டூடி” திரை விமர்சனம்
சில தினங்களுக்கு முன் வெளியாகி தியேட்டர்களில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது “டூடி” திரைப்படம். இந்தப் படத்தை கார்த்திக் மதுசூதன் தனது கனெக்டிங் டாட்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
பெங்களூரில் நட்சத்திர ஓட்டல்களில் பாருக்கு வரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கிதார் வாசித்து, பாடல்கள் பாடி பெண்களின் மனதைக் கவர்ந்து அவர்களுடன் உல்லாசமாக சுற்றித் திரியும் இளைஞன் கார்த்திக். இவனுக்கு காதல், கல்யாணம், ஒருவரோடு நீண்ட கால வாழ்க்கை மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. இவனுக்குப் பிடித்ததெல்லாம் தினசரி விதவிதமான பெண்களோடு சுற்றுவதும் மதுபோதையில் சந்தோஷமாக இருப்பது மட்டும் தான். ஆனால் தனது வீட்டை கலைநயத்துடன் அமைத்து, இசை மீது தீவிர பற்று கொண்டவனாக ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறான்.
இந்த சமயத்தில் தனது பள்ளித் தோழனின் திருமணத்திற்கு சென்றபோது மணமகளின் தோழி தனியாக இருக்கும்போது அவளை தன்வசப்படுத்த முயன்று, பின்னர் அவள் தங்கியிருக்கும் ஓட்டலில் விடுவதற்கு காரில் அழைத்துச் செல்லும் போது இருவருக்கும் பரஸ்பர நட்பு ஏற்படுகிறது. பின்னர் அந்தப் பெண் கார்த்திக் மீது காதல் வசப்பட்டு கார்த்திக்கிடம் கூறுகையில் ஏற்க மறுக்கிறான்.
பின்னர் அந்தப் பெண்ணிடம் நானும் உன்னை விரும்புகிறேன் என்று கார்த்திக் கூறுகையில்… ஐந்து வருடங்களுக்கு முன் நீ என்னைப் பார்த்திருந்தால் நான் உன்னை காதலித்திருப்பேன் என அழுகிறாள். ஆச்சர்யத்தில் உறைந்து போன கார்த்திக் ஏன் என கேட்க, நான் ஐந்து வருடமாக வேறு ஒருவருடன் வாழ்ந்து வருவதாக கூறுகின்றாள்.
அதன் பிறகு இவர்களது காதல் என்னானது? இருவரும் இணைந்தார்களா? வேறு நபருடன் வாழ்ந்து வரும் அந்தப் பெண் கார்த்திக்கை ஏன் காதலித்தார் என்பது மீதிக்கதை….
கதா நாயகனாயாக நடித்துள்ள கார்த்திக் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் என்பதை தியேட்டர்களில் காணமுடிகிறது. பாடல் வரிகளும், ஒளிப்பதிவும் பிரமாதம். படமே இசைக் கலைஞனின் வாழ்க்கை என்பதால் அருமையான இசை படத்தை தொய்வில்லாமல் நகர்த்துகிறது. மற்றபடி படத்தில் நடித்துள்ள சக நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர்.