அதிமுக பேச்சாளரை நடுரோட்டில் விட்டுச் சென்ற “அதிமுக நிர்வாகிகள்”
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார். மேலும் நிகழ்ச்சியில் பேசுவதற்காக தூத்துக்குடி எஸ்.டி.கருணாநிதி என்ற தலைமை கழக பேச்சாளர் ஒருவரையும் ரூபாய் 10 ஆயிரம் கொடுப்பதாக அழைத்து வந்தனர்.
பொது கூட்டம் முடிந்த பின் பேச்சாளளர் தனக்கு வழங்குவதாக கூறிய பணத்தை கேட்டுள்ளார். அதற்கு நிர்வாகிகள் திமுகவை தாக்கி பேசாததால் பேசிய பணம் தர முடியாது என கூறிவிட்டனர். இதனால், நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 4 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்த நிர்வாகிகள், எஸ்.டி.கருணாநிதியை நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.
நள்ளிரவு நேரத்தில் நடுவழியில் நிர்வாகிகள் இறக்கிவிட்டதால், அவர் செய்வதறியாமல் தவித்தார். பின்னர் தனக்கு நெருங்கிய நண்பர்களை வரவழைத்து அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. திமுக-வை தாக்கி பேசாத அதிமுக பேச்சாளரை அக்கட்சி நிர்வாகிகளே பாதியில் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.