விமர்சனம்

ஆணவக் கொலைகளின் ஆல்பமா ? “நட்சத்திரம் நகர்கிறது” திரை விமர்சனம்

சமுதாயத்தில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் இயல்பான காதலை, குடும்ப கௌரவம் என்னும் பெயரில் பலியிடத் துடிக்கும் கயவர்களின் செயலை வெளிக்காட்டியிருக்கும் படமே “நட்சத்திரம் நகர்கிறது” இதுவே படத்தின் கதை.

பாண்டிச்சேரியில் உள்ள நடிப்பு பயிற்சிப் பட்டறையில் பல்வேறு ஊர்களில் இருந்து நடிப்பு கற்றுக் கொள்வதற்காக ஆண்களும், பெண்களும் வருகிறார்கள். இதில் சேலத்திலிருந்து அர்ஜுன் என்ற இளைஞரும் அவர்களுடன் இணைகிறார். இதற்கிடையில் இனியன், ரெனே இருவரும் காதலித்து ஒன்றாக வாழ்ந்து வருகையில் வாக்குவாதம் ஏற்பட்டு அதில் ஜாதி பேசப்பட்டு இருவரும் பிரிகிறார்கள்.

பயிற்சிப் பட்டறையில் நாடகம் நடத்தலாம் என முடிவாகி பல்வேறு தலைப்புகள் பேசப்பட்டு,  இறுதியில் ஆணவக் கொலைகள் பற்றி பேசப்படும் போது மற்றவர்களுக்கும் அர்ஜுனுக்கும் கருத்து மோதல் ஏற்படுகிறது. நாடகத்திற்கான ஒத்திகை ஆரம்பமாகி அதில் காதலர்களாக இனியனும், ரெனேவும் நடிக்கிறார்கள். இதற்கிடையில் அர்ஜுன் ரெனேவை காதலிக்கிறான். அர்ஜுன் வீட்டில் திருமணம் செய்ய வலியுறுத்தும் சமயத்தில் அவன் காதலை வெளிப்படுத்தும் போது ரெனே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பிரச்சினை ஏற்படுகிறது.

மூன்றாம் பாலித்தவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்கிறார். இரண்டு ஆண் நண்பர்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். இதுபோன்ற சில காதல் கதைகளால் நகரும் நட்சத்திர கூட்டத்தில் ரெனே, இனியன் இணைந்தார்களா ? அர்ஜுன் காதல் என்னானது? நாடகம் நடத்தப் பட்டதா? என்பது மீதிக்கதை…..

ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருக்கும் ரெனே ( துஷாரா ) தான் இளம் வயதில் பட்ட அவமானங்களால் அடங்கி ஒதுங்கி விடாமல், தன்னை வெறுத்து ஒதுக்கிய சமுதாயத்திற்கு எதிராக நன்றாக படித்து உயர்ந்த நிலையை அடைந்து, தனக்கு தோன்றியதை பேசி, பிடித்ததை செய்து, தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். இனியனாக நடித்திருக்கும் காளிதாஸும் நன்றாக நடித்திருக்கிறார்.

காதலுக்கு ஜாதி மதம் தடையில்லை என்பதை வலியுறுத்துவதோடு, காதல் ஆணுக்கும், பெண்ணுக்கும் மட்டுமானது அல்ல, பாலின ஈர்ப்பு, மூன்றாம் பாலினத்தவரின் காதல் என பல நட்சத்திரங்கள் மின்னுகிறது.

தமிழகத்தில் நடைபெற்ற ஆணவக் கொலைகளின் காட்சிகளை சில இடங்களில் காண்பித்து, ஜாதியைச் சொல்லி அரசியல் செய்யும் அரசியல் தலைவர்களை தோலுரித்து காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. மொத்தத்தில் இயக்குனர் ரஞ்சித் வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button