கெட்ட பழக்கம் உள்ளவன் தான் ! ஆனால் கெட்டவன் இல்லை ! “பகலறியான்” விமர்சனம்
ரிஷிகேஷ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் லதா முருகன் தயாரிப்பில், வெற்றி, அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய்தீனா, முருகன், வினு பிரியா உள்ளிட்டோர் நடிப்பில், முருகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பகலறியான்”.
கதைப்படி.. நாயகன் வெற்றி இளம் வயதிலேயே தனது தந்தையை கொலை செய்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு வந்ததும். நண்பரின் கார் மெக்கானிக் கடையில் இருந்து வருகிறார். அப்போது அக்ஷயா என்கிற பெண்ணோடு காதல் ஏற்பட்டு, அவரது வீட்டிற்குச் சென்று பெண் கேட்க, அவரது தந்தை கெட்ட பழக்கங்கள் அனைத்தும் உள்ள உன்னை நம்பி பெண்ணை கொடுக்க முடியாது என மறுத்து விடுகிறார். ஆனால் அக்ஷயா வாழ்ந்தால் வெற்றியோடு தான் வாழவேண்டும் என உறுதியாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் தந்தைக்கு தெரியாமல், வெற்றியை நம்பி வீட்டைவிட்டு வருகிறார். பின்னர் வெற்றியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர்கிறாள்.
இதற்கிடையில் முருகனின் தங்கை வினு பிரியா வீட்டிற்கு தெரியாமல், காதலனோடு சென்றுவிடுகிறார். தங்கையைத் தேடி முருகன் தனது கும்பலுடன் தேடி அழைக்கிறார். அப்போது இன்னொரு கும்பல் முன்பகை காரணமாக, முருகனை தீர்த்துக்கட்ட கூலிப்படையை அனுப்புகிறது. இதற்கிடையில் வினு பிரியாவின் காதலன் தனது நண்பர்களுக்கு வினு பிரியாவை விருந்து படைக்கும் வகையில், பணத்தை பெற்றுக்கொண்டு அவளை ஒப்படைத்துவிட்டு சென்று விடுகிறான்.
வெற்றியை நம்பி வந்த அக்ஷயாவின் வாழ்க்கை என்னவானது ? முருகன் தனது தங்கையை கண்டுபிடித்தானா ? என்பது மீதிக்கதை..
படம் முழுவதும் ஒரே இரவில் நடப்பது போல் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர், நாயகன் வெற்றி ஒரு பெண்ணுடன் காரில் நகரைச் சுற்றி வருகிறார். தங்கையைத் தேடி முருகன் தனது கும்பலுடன் காரில் வலம் வருகிறார். இடையிடையே இருவர் மீதும் முன்பகை காரணமாக தாக்குதல் நடத்துகின்றனர். மேலே கூறிய இரண்டு சம்பவங்களையும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது போல், கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
வெற்றி வழக்கம் போல் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கெட்ட பழக்கம் உள்ளவன் தான், ஆனால் கெட்டவன் இல்லை என வசனம் பேசும் போதும் சரி, பல இடங்களில் காட்சிக்களுக்கு ஏற்றவாறு முக பாவனைகள் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முருகன் இப்படத்தை தயாரித்து, இயக்கியதோடு நடிகராக ஸ்கோர் செய்திருக்கிறார். அதேபோல் அக்ஷயா, வினு பிரியா இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
விவேக் சரோவின் இசையும், அபிலாஷின் ஒளிப்பதிவும் சிறப்பு.