சீயான் விக்ரமின் “கோப்ரா” திரை விமர்சனம்.
நடிகர் விக்ரம் நடிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ள “கோப்ரா” திரைப்படத்தை திரையரங்குகளில் விக்ரம் ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்தப் படத்தில் கதிர், மதி இருவரும் சகோதரர்கள். கதிர் துணிச்சலானவன், மதி படிப்பில் கெட்டிக்காரன் அதிலும் கணிதப் பாடத்தில் சிறந்த மாணவராக தேர்வாகிறான். இவர்களுடைய தாய் இறந்த போது அவருடைய சடலத்தை அவமானப்படுத்திய காவல் அதிகாரியை கதிர் கொலை செய்கிறான். பின்னர் இருவரும் ஒருவராக தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். மதியின் காதலால் ஏற்படும் பிரச்சனை காரணமாக இருவரும் பிரிய நேரிடுகிறது.
மதி தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி எந்தவித தடயமும் இல்லாமல் கூலிக்கு கொலை செய்கிறான். அந்தப் பணத்தை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுத்து உதவுகிறார். கணித ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். மதியை தீவிரமாக காதலிக்கும் ஶ்ரீ நிதி ஷெட்டிக்கும், மதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு தாலி கட்டும் சமயத்தில் மதியை காணவில்லை.
ஆதாரங்கள் இல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கொலைகளுக்கும், கணிதத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இதை கண்டு பிடிக்க இண்டர்போல் அதிகாரி இந்தியாவிற்கு வருகிறார். அதை தேடும் சமயத்தில் ரிசி என்கிற வில்லன் அண்ணன் தம்பி இருவரையும் கொலை செய்யத் திட்டமிடுகிறான். அவனிடமிருந்து அண்ணன் தம்பி இருவரும் தப்பித்தார்களா? இண்டர்போல் அதிகாரிகள் கைது செய்தார்களா ? என்பது மீதிக்கதை…..
அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். படத்தின் முதல் பாதியில் பல்வேறு காட்சிகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் படம் நகர்கிறது. இடைவேளைக்குப் பிறகு வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. நடிகர் விக்ரமிற்கு பல விதமான தோற்றங்கள் புதிதல்ல என்றாலும் இந்தப் படத்தில் ரொம்பவே மெனக்கெட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.