ஏமாற்றுவதைவிட , ஏமாற்றப்படுவது தவறு ! “வித்தைக்காரன்” திரைவிமர்சனம்
ஒயிட் கார்பெட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில், கே. விஜயபாண்டி தயாரிப்பில், வெங்கி இயக்கத்தில் சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், மது சுதன், சுப்பிரமணிய சிவா, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வித்தைக்காரன்”.
கதைப்படி… சென்னையில் மாபெரும் கடத்தல் மாஃபியாக்களான கல்கண்டு ரவி வைரத்தையும் ( மதுசூதன் ), மாரி கோல்டு தங்கத்தையும் ( சுப்ரமணிய சிவா ), அழகு வெளிநாட்டு கரன்சி மையும் ( ஆனந்தராஜ் ) கடத்தி வருகின்றனர். இவர்களைப் பற்றிய தகவல்களை ரகசியமாக சேகரித்து வருகிறார் பெண் பத்திரிகையாளர் சிம்ரன் குப்தா. மேஜிக் கலைஞரான வெற்றி ( சதீஷ் ) இவருக்கு உதவுவது போல் தகவல்களை தெரிந்துகொண்டு மேற்கண்ட மூவருக்கும் உதவுவது போல் அவர்களுடைய கடத்தல் சம்பவத்தில் பங்கு பெற்று, கடத்தல் பொருட்களை கொள்ளையடித்து செல்கிறார். வெற்றியைப் பொறுத்தவரை ஏமாற்றுவது தவறில்லை, ஏமாற்றப்படுவதுதான் தவறு என்பதில் உறுதியாக இருக்கிறார்.
எதற்காக மேஜிக் கலைஞரான வெற்றி மேற்கண்ட மூன்று மாஃபியா கும்பல்களை குறிவைக்கிறார் ? அவரது நோக்கம் நிறைவேறியதா ? இல்லையா ? என்பது மீதிக்கதை…
வித்தியாசமான கதை களத்தில் வளர்ந்து வரும் நடிகரான சதீஷ் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் இடம்பிடித்திருக்கிறார். ஆனந்தராஜ், சதீஷ் கூட்டணி சிரிப்பை வரவழைத்து, படத்தின் முதல்பாதி விருவிருப்பாக நகர்கிறது. இடைவேளைக்குப் பிறகு சலிப்படையும் விதமாக திரைக்கதை அமைந்துள்ளது.
சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து, காட்சிகளை நகர்த்த இயக்குநர் முயற்சி செய்திருக்கலாம். படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.