கிரானைட் குவாரி, குரூப்-1 தேர்வு, வங்கிக்கடன் மோசடி செய்பவர்கள் திருந்துவார்களா !.? “இந்தியன்-2” படத்தின் திரைவிமர்சனம்
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “இந்தியன் -2”.
கதைப்படி.. சமூகப் பிரச்சினைகளை யூ டியூப்பில் வெளியிட்டு தீர்வுகாணும் முயற்சியில், ஊழலுக்கு எதிராக வீடியோ பேசி வெளியிட்டு வருகிறார் சித்தார்த். இவர் எவ்வளவு முயற்சி எடுத்தும் சமூகத்தில் நடைபெறும் அவலங்களை தடுக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில் இருந்துவரும் நிலையில், ஒரு யோசனை தோன்றுகிறது. அதாவது பல வருடங்களுக்கு முன் ஊழலுக்கு எதிராக பல்வேறு கொலைகளை செய்துவிட்டு தலைமறைவான இந்தியன் தாத்தா வந்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும் என நம்புகிறார்கள்.
பின்னர் #COME_BACK_INDIAN என ஹேஸ்டேக் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆகிறது. அதனை தைவான் நாட்டில் வர்மக்கலை பயிற்றுவிக்கும் சேனாதிபதி ( கமல் ) தெரிந்து கொள்கிறார். பின்னர் இந்திய வங்கிகளில் லட்சக்கணக்கான கோடி பணத்தை கடனாகப் பெற்று, திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் தொழிலதிபரை சாதுர்யமாக கொலை செய்கிறார். அதன்பிறகு இந்தியா வந்ததும், கனிம வளங்களை சுரண்டி கோடி கோடியாய் கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்பவர், குரூப்-1 தேர்வு மூலம் ஊழல் செய்து கோடீஸ்வரனாக வாழ்பவர், குஜராத், பஞ்சாப் என ஒவ்வொருவராக கொலை செய்கிறார். இதற்கிடையில் சிபிஐ அதிகாரி பாபி சிம்ஹா தலைமையில் ஒரு குழு இந்தியன் தாத்தாவை கைது செய்ய வலைவீசி தேடி வருகிறது. பின்னர் தமிழகத்தில் ஊழலை ஒழிக்க நாற்பது வயதிற்கு கீழ் உள்ளவர்கள் முன்வர வேண்டும் எனப்பேசி, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலிருந்தே பரிசோதனையை தொடருங்கள் என மூலைச் சலவை செய்து இளைஞர் பட்டாளத்தை தூண்டும் விதமாக வீடியோ வெளியிடுகிறார்.
சிபிஐ இந்தியன் தாத்தாவை கைதுசெய்தனரா ? ஊழலை ஒழிக்க கமல் எடுத்த முயற்சிகள் வெற்றி பெற்றதா என்பது மீதிக்கதை..
இன்றைய காலகட்டத்தில், நாம் அன்றாட சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள், சமூக அவலங்களை நம் கண்முன் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இதற்குமுன் அவரது அந்நியன், எந்திரன் படங்களில் சொன்ன விஷயங்கள்தான் என்றாலும், இன்றைய சூழ்நிலையில் சொல்ல வேண்டிய கதைதான். திரைக்கதையில் கமலின் வசனங்களை குறைத்து, அவரது கொலைகளுக்கான காரணங்களை, பொதுமக்கள் பேசுவதுபோல் காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கலாம்.
இந்த கதைக்கு கமலைத் தவிர வேறு ஒரு நடிகரை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கமல். ஒப்பனையில் சிறுசிறு குறைகள் தென்பட்டாலும், அடையாளம் தெரியாத அளவுக்கு கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தமிழ் திரையுலகில் பல்வேறு புதுமைகளை புகுத்தி, கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கமலின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற வேண்டும் என்பதே அனைவரின் ஆவல்.
மற்றபடி சமுத்திரக்கனி, தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.