மாணவனின் கல்விக் கனவை காவு வாங்கிய கல்விக்கடன் ! “காலேஜ் ரோடு” படத்தின் திரைவிமர்சனம்
எம்.பி. எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் பிரவின், சரத் ஆகியோரின் தயாரிப்பில், லிங்கேஷ், மோனிகா நடிப்பில், ஜெய் அமர்சிங் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “காலேஜ் ரோடு”.
கதைப்படி…. இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றான தனியாருக்குச் சொந்தமான கல்லூரியில் நாயகன் லிங்கேஷிற்கு மதிப்பெண் அடிப்படையில் ( Merit ) சீட் கிடைத்து முதலாமாண்டு மாணவராக சேர்கிறார். கல்லூரி நிர்வாகம் மேலும் பணம் கேட்டதால் விங்கிக்குச் சென்று கல்விக்கடன் கேட்டு வங்கியின் மேலாளரிடம் பேசுகிறார். அப்போது முகமூடி அணிந்த கும்பல் துப்பாக்கி முனையில் வங்கியில் பணத்தை கொள்ளையடித்து தப்பித்துச் செல்கின்றனர். பின்னர் போலீஸ் விசாரணையில் கொள்ளையனை அடையாளம் காண்பிப்பதாக லிங்கேஷ் கூறுகிறார்.
அதன்பிறகு லிங்கேஷை அடிக்கடி விசாரணைக்கு போலீஸ் அழைக்கின்றனர். அடுத்தடுத்து வங்கிகளில் கொள்ளைச் சம்பவங்களும் அரங்கேறுகிறது. இதற்கிடையில் கல்லூரியில் ( Cyber Security ) சைபர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது அசாத்திய திறமையை உணர்ந்து நண்பர்களும் ஆராய்ச்சிக்கு துணை புரிகின்றனர்.
இந்நிலையில் இவரது நற்குணங்களால் நாயகி மோனிகா லிங்கேஷை விரும்புகிறார். சைபர் பாதுகாப்பு ப்ராஜெக்ட் சம்பந்தமாக விண்ணப்பிக்க விண்ணப்பம் வாங்கிக் கொண்டு மோனிகாவுடன் பேசிக்கொண்டு வரும்போது விண்ணப்பத்தை தொலைத்து விடுகிறார். அதனால் தனது கனவு ப்ராஜெக்ட் சமர்ப்பிக்க முடியாமல் போய்விடுமோ என பதற்றமடைகிறார். இதனால் லிங்கேஷ் மோனிகாவிடம் பேசுவதை தவிர்க்கிறார்.
லிங்கேஷ், மோனிகா காதல் நிறைவேறியதா ? வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை அடையாளம் காண்பித்தாரா லிங்கேஷ் ? அவரது கணவு ப்ராஜெக்ட் முடிவுற்றதா ? என்பது மீதிக்கதை….
நாயகன் லிங்கேஷ் நகரம், கிராமம் என இருவிதமான தோற்றங்களிலும் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி மோனிகாவும் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாணவர்கள் கல்லூரி படிப்பிற்காக கல்விக்கடன் பெறுகின்றனர். அந்த கடனுக்கான வட்டியை செலுத்தாததால் வங்கி நிர்வாகம் பணத்தை வசூலிப்பதற்காக ஊர் எல்லையில் புகைப்படம் அடங்கிய பேனர் வைக்கின்றனர். இதனால் அவமானப்பட்ட பெற்றோரும், மாணவர் ஒருவரும் தற்கொலை செய்கின்றனர். இதுபோன்ற மனதை உருக்கும் சம்பவங்கள் இன்றும் பல இடங்களில் நடந்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவரின் கதையை மேற்கூறிய நகர வாழ்கையோடு இணைத்து, இளைஞர்கள் ரசிக்கும்படியான வசனங்களுடன் அற்புதமாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.