ப. ரஞ்சித்தின் வழக்கமான சாதிய சாயல் “ப்ளூ ஸ்டார்” படத்தில் உள்ளதா ?
இயக்குநர் ப. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில், அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், பிரித்வி பாண்டியராஜன், பகவதி பெருமாள், லிசி ஆண்டனி, சாந்தனு உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “ப்ளூ ஸ்டார்”.
கதைப்படி… அரக்கோணத்தில் ரஞ்சித் ( அசோக் செல்வன் ) ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருக்கிறார். ராஜேஷ் ஆல்ஃபா அணியின் கேப்டனாக இருக்கிறார். அந்த பகுதியில் ஒரேயொரு மைதானம் தான் இருக்கிறது. அதுவும் கோவிலுக்குச் சொந்தமானது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், முதலில் வந்து கல் வைப்பவர்கள் மைதானத்தில் விளையாடலாம் என இருதரப்பு பெரியோர்கள் பேசி முடித்துள்ளனர். ஆனால் ரஞ்சித் அணியினர், ராஜேஷ் அணியினர் கல் வைத்ததை மீறி விளையாடுகின்றனர். அப்போது இரு அணியினருக்கும் தகராறு ஏற்படுகிறது. பின்னர் போட்டி வைத்து ஜெயிப்பவர்கள் முதலில் விளையாடலாம் என முடிவு செய்து இரு அணியினரும் மோதுகின்றனர்.
ராஜேஷ் நகர்ப்பகுதியில் உள்ள பிரபலமான கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் வீரர்களை அழைத்து வந்து விளையாடி ப்ளூ ஸ்டார் அணியைத் தோற்கடித்து சந்தோஷப்படுகிறார். அந்த வீரர்களுக்கு பணம் கொடுக்க கிளப்பிற்கு சென்றபோது, வலைப்பயிற்சியில் விளையாடிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து தானும் விளையாட ஆசைப்பட, அப்போது பயிற்சியாளர் வந்ததும் ராஜேஷை வெளியே விரட்டி அடிக்க, அதை ரஞ்சித் பார்த்ததும் தடுக்க நினைக்க, தகராறு ஏற்பட்டு இருவரும் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
பின்னர் இரு அணியினரும் ஒன்றினைந்து பிரபலமான கிரிக்கெட் கிளப் அணியிடன் விளையாடி வெற்றிபெற வேண்டும் என ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள இருதரப்பிலும் பயங்கர எதிர்ப்பு கிளம்புகிறது. இதற்கிடையில் ரஞ்சித் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ( ஆனந்தி ) கீர்த்தி பாண்டியனை காதலிக்கிறார். அப்பகுதி இளஞர்களுக்கும், ரஞ்சித்திற்கும் அடிதடி நடைபெறுகிறது.
கிராமத்து இளைஞர்கள் நகர்புற கிரிக்கெட் கிளப் வீரர்களுடன் விளையாடி வெற்றி பெற்றார்களா ? ரஞ்சித்தின் காதல் நிறைவேறியதா ? இல்லையா ? என்பது மீதிக்கதை…
காலனி பகுதி வாசியாக அசோக் செல்வன் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கீர்த்தி பாண்டியன் அச்சு நம்ம பக்கத்து வீட்டு பெண் போல கதாப்பாத்திமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது அப்பா, அம்மாவாக பகவதி பெருமாள், லிசி ஆண்டனி, தம்பியாக பிரீதிவி பாண்டியராஜன் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதேபோல் சாந்தனுவை நடிகனாக மாற்ற இயக்குநர் ரொம்பவே முயற்சித்துள்ளார். சாந்தனுக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே அவர் வீட்டில் ப.ரஞ்சித்தின் அலுவலகம் இருந்ததால், தினசரி வாய்ப்பு கேட்டு கெஞ்சுகிறார், பாவம் நாமாவது சாந்தனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என இயக்குநரிடம் பேசி வாய்ப்பு கொடுத்தார்களாம்.
பெரும்பாலான காட்சிகளில் குறிப்பிட்ட சமூகத்தினரின் அடையாளங்களை காண்பித்ததோடு, தனக்கேயுரிய வசனங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார் தயாரிப்பாளர் ப. ரஞ்சித். இவரது சமூக சாயல் இருந்தாலும், கோபம் அழிவைத் தரும், நிதானம் கற்றுக் கொடுக்கும் என்ற வரிகளுக்கேற்றவாறு கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.