இயற்கை வளங்களைச் சுரண்டி உலகை ஆள நினைக்கும் கார்பரேட் நிறுவனம் ! “அயலான்” திரைவிமர்சனம்
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில், ஏ. ஆர். ரகுமான் இசையில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “அயலான்”.
கதைப்படி… இயற்கை விவசாயத்தையும், பிற உயிரினங்களையும் நேசிக்கும் சிவகார்த்திகேயன், தனது தாயின் வற்புறுத்தலால் சென்னைக்கு வேலை தேடி வருகிறார். சென்னையில் கருணாகரன், யோகிபாபுவுடன் பழக்கம் ஏற்பட்டு அவர்களுடனேயே தங்குகிறார். பின்னர் வேற்று கிரக வாசியை ( ஏலியன் ) சந்திக்கிறார். பூமியில் இயற்கைக்கு எதிராக அறிவியல் வளர்ச்சியைப் பயன்படுத்தி, எதிர் காலத்தில் உயிரினங்கள் வாழமுடியாத வகையில் பூமிக்கு அடியில் எரிவாயு எடுக்க திட்டமிடும் கார்ப்பரேட் நிறுவனங்களின் முயற்சியை தடுப்பதற்காக பூமிக்கு வந்ததாக கூறுகிறது அந்த ஏலியன். பின்னர் எரிவாயு எடுப்பதற்கான வேலைகள் தீவிரமாகும் போது, ஏலியன் தடுப்பதற்காக செல்கிறது. அதைப் பிடித்து அழிக்க நினைக்கிறார்கள்.
அதன்பிறகு அந்த கும்பலிடமிருந்து ஏலியனை சிவகார்த்திகேயன் காப்பாற்றினாரா ? இல்லையா ?, சுயநலத்திற்காக இயற்கை வளங்களை கொள்ளையடித்து, மனிதகுலத்தை அழிக்க நினைத்தவர்களின் ஆசை நிறைவேறியதா ? என்பது மீதிக்கதை…
ஹாலிவுட் படங்களில் குறிப்பாக அவதார் படத்தில் உள்ள காட்சிகளைப் போல், தமிழில் கிராஃபிக் காட்சிகள் எனத் தெரியாத அளவுக்கு தத்ரூபமாக ஏலியனை காண்பித்த படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். சிவகார்த்திகேயன் தனக்கே உரிய நடிப்பை வெளிப்படுத்தி, பொங்கல் விடுமுறையில் திரையுலக ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார். சிவகார்த்திகேயன், கருணாகரன், யோகிபாபு கூட்டனி சிறப்பு.
படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.