கூலிப்படை கும்பலை பலி வாங்கினாரா கால் டாக்சி டிரைவர் ? “டிரைவர் ஜமுனா” திரைவிமர்சனம்
18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்பி சௌத்ரி தயாரிப்பில், கிங்ஸ்லி இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “டிரைவர் ஜமுனா”.
கதைப்படி…. கால் டாக்சி டிரைவராக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை கூலிப்படையினரால் கொலை செய்யப்படுகிறார். இந்த சம்பவத்திற்குப் பிறகு தாயும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார். இந்த சூழ்நிலையில் குடும்பத்தைக் காப்பாற்ற தந்தையின் கால் டாக்சியை ஓட்ட ஆரம்பிக்கிறார் ஜமுனா ( ஜஸ்வர்யா ராஜேஷ் ).
இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ மரகதவேல் என்பவரை கொலை செய்ய கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் திட்டமிடுகின்றனர். பின்னர் ஜமுனாவின் கால் டாக்சியை ஆன்லைன் மூலம் பதிவு செய்து வாலாஜாத்திலிருந்து ஈசிஆர் நோக்கி பயணிக்கின்றனர். காவல்துறையினரும் இவர்களை பின் தொடர்கின்றனர். இந்நிலையில் போலீசிடம் கூலிப்படையினர் சிக்கினார்களா ? அவர்களால் ஜமுனாவிற்கு ஏதாவது விபரீதம் ஏற்பட்டதா ? ஜமுனாவின் தந்தையை எதற்காக கூலிப்படையினர் கொலை செய்கின்றனர் ? என்பது மீதிக்கதை….
குடும்பப் பிரச்சனையால் டிரைவர் தொழிலுக்கு வந்த ஜமுனா, டிரைவிங் தொழிலை நேசித்து கார் ஓட்டும் டிரைவர் காதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் ஜஸ்வர்யா ராஜேஷ். இக்கட்டான சூழ்நிலையில் டயலாக் இல்லாமல் முக பாவனைகள் மூலம் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கால்டிரைவராக தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் பெண் ஓட்டுனர்களின் ரோல் மாடலாக ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
படம் ஆரம்பித்ததிலிருந்து இறுதிவரை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் சுவாரஸ்யமான திரைக்கதையை அமைத்து, டூயட் பாடல்களோ, பிரமாண்டமான சண்டைக்காட்சிகளோ இல்லாமல் விறுவிறுப்பாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். நெடுஞ்சாலையில் காருக்குள்ளேயே நடைபெறும் பெரும்பாலான காட்சிகளும், காரை துரத்தும் காட்சிகளும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவும், பின்னணி இசையும் சிறப்பு என்றே சொல்லலாம்.
ஜஸ்வர்யா ராஜேஷ் சினிமா கேரியரில் இந்தப் படம் முக்கியமான பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.