கெட்ட பெயரோடு ஒரு நல்லவன் ! ஐய்யங்கார் சமூகத்தை இழிவுபடுத்திய இயக்குநர் ! – ரத்னம் திரைவிமர்சனம்
ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில், கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், விஷால், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஜெயபிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில், ஹரி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ரத்னம்”.
கதைப்படி.. வேலூர் எம்எல்ஏ பன்னீர்செல்வத்தின் ( சமுத்திரக்கனி ) விசுவாசமான அடியாளான ரத்னம் ( விஷால் ) அநியாயம் நடக்கும் இடங்களில் தட்டிக்கேட்கும் நபராக இருந்து வருகிறார். இந்நிலையில் திருத்தணியில் இருந்து நீட் தேர்வு எழுதுவதற்காக வேலூர் வருகிறார் மல்லிகா ( ப்ரியா பவானி சங்கர் ). அவரைக் கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது. அவரைக் காப்பாற்றுகிறார்.
ஆனால் அந்தப் பெண் தாயின் மறு உருவமாக ரத்னம் உணர்கிறான். மல்லிகாவை கொலை செய்ய துரத்தியது ஆந்திர மாநிலம் நகரியில் அடாவடி செய்து கொண்டிருக்கும் ராயுடு சகோதரர்கள் என்பது ரத்னத்திற்கு தெரிய வந்ததும், அவர்களிடம் இருந்து மல்லிகாவை காப்பாற்ற வேண்டும் என விரும்புகிறார். பின்னர் மல்லிகா தேர்வு எழுதி முடித்ததும் அவரை காரில் ஏற்றிக்கொண்டு திருத்தனிக்குச் செல்கிறார். அங்கு ரத்னத்திற்கு ஸ்கெட்ச் போட்டு அவனை முதலில் தீர்த்துக்கட்ட முடிவு செய்து, ஆட்களை அனுப்புகின்றனர் ராயுடு சகோதரர்கள்.
அந்த தாக்குதலில் இருந்து ரத்னம் தப்பித்தானா ? மல்லிகாவின் குடும்பம் என்னானது என்பது மீதிக்கதை..
வழக்கமாக ஹரி படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒருவிதமான எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இந்தப் படத்தை எதிர்பார்த்து தியேட்டருக்கு சென்றால் ஏமாற்றமே மிஞ்சும் என்கிறார்கள் ரசிகர்கள். வேலூர் எம்எல்ஏ வின் அரவணைப்பில் அடிதடி, வெட்டுக்குத்து என திரியும் ரத்னம் மல்லிகாவை பார்த்ததும் அப்படியே அவர் பின்னாலேயே சுற்றத் தொடங்குகிறார். அதற்கான வலுவான காரணத்தோடு திரைக்கதையை நகர்த்திய ஹரி, ஐய்யங்கார் ( பிராமணர் ) குடும்பத்தின் வாரிசு தான் ரவுடி ரத்தினம் எனவும், க்ளைமாக்ஸ் காட்சியில் ஐய்யங்கார் ( பிராமணர்கள் ) மூன்று பேர் துண்டு துண்டாக வெட்டிய மனித உடல்களை பூஜை பொருட்களோடு சேர்த்து எடுத்துச் சென்று பொது இடங்களில் போடுவது போல் காட்சிப்படுத்தி ஐய்யங்கார் சமூகத்தை இழிவு படுத்தியிருக்கிறார். ஹரியின் வழக்கமான டூயட், காமெடி இந்தப் படத்தில் மிஸ்ஸிங். ஹரி திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவணம் செலுத்தியிருந்தால் “ரத்னம்” ஜொலித்திருக்கும்.
படம் முழுவதும் வெட்டு, குத்து ரவுடியாகவே வளம்வரும் விஷால், கதாப்பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். ரவுடி கதாப்பாத்திரத்தில் நடை, உடை, பாவனைகளில் பொருந்தியிருக்கிறார். ப்ரியா பவானி சங்கர் தனது கதாப்பாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி நன்றாக நடித்திருக்கிறார். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். மற்றபடி படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.