யோசிக்காமல் செய்த தவறால், திசைமாறும் இளைஞர்கள் ! “அமீகோ கேரேஜ்” திரை விமர்சனம்
பீப்பிள் புரொடக்சன்ஸ் ஹவுஸ் நிறுவனம் சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஜீ.எம். சுந்தர் ஆதிரா, தீபா பாலு, தாசரதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “அமீகோ கேரேஜ்”.
கதைப்படி.. ருத்ரன் ( மகேந்திரன் ) பள்ளியில் தனது நண்பர்களுடன் ஜாலியாக சுற்றித்திரிகிறான். தன்னைவிட மூன்று வயது அதிகமான பெண் ஒருவரை விரும்பி அவர் பின்னாலேயே திரிந்து வருகிறான். இப்படியே நாட்கள் நகர, ஒருநாள் வகுப்பறையில் இயற்பியல் ஆசிரியர் ரெக்கார்டு நோட்டை கேட்க, ருத்ரன் தனது இரண்டு நண்பர்களுடன் சேட்டை செய்ததும் அந்த ஆசிரியர் இவர்களை கடுமையாக தாக்குகிறார். அதோடு அவர்களின் பெற்றோரை அழைத்து வருமாறு உத்தரவிடுகிறார். இதிலிருந்து தப்பிப்பதற்காக அந்த பகுதியில் கேரேஜ் நடத்திவரும் ஆனந்த் ( ஜி.எம். சுந்தர் ) உதவியை நாடுகின்றனர்.
ஆனந்தின் கேரேஜில் எப்போதும் குடித்துவிட்டு கும்மாளம் போடும் சத்தம் கேட்டபடி இருப்பதால், அப்பகுதியினர் தங்கள் குழந்தைகள் அந்த கேரேஜ் பக்கம் போகாமல் பார்த்துக் கொள்வார்கள். தங்கள் மகன் அந்த கேரேஜ் பக்கம் போய் கெட்டுப் போய்விடக் கூடாது என்கிற பயம் ருத்ரன் பெற்றோருக்கும் உண்டு. அதையும் மீறி நன்பர்களுடன் ஆனந்த் உதவியை நாட, அவர்களது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறது. பின்னர் ஆனந்த், ருத்ரன் இருவருக்குமிடையே ஆழமான நட்பு தொடர்கிறது.
சில வருடங்கள் கடந்த நிலையில், கேரேஜ், ஒயின் ஷாப் என வெட்டியாக ஊர் சுற்றிவருகிறான் ருத்ரன். ஒருநாள் தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு ஒயின் ஷாப்பிலிருந்து வெளியே வரும்போது ஏற்பட்ட தகராறில் அப்பகுதியின் பிரபலமான ரவுடி ஒருவனை தாக்குகிறான் ருத்ரன். அந்த பிரச்சனையில் ஆனந்த் சமாதானம் பேசி முடிக்கிறார். மகனின் போக்கு சரியில்லாத காரணத்தால் அவரது தந்தை தனது நண்பர் மூலம் ருத்ரனுக்கு வேலை வாங்கித் தருகிறார். ஆனாலும் பிரச்சினைகள் தொடரவே செய்கிறது. இந்நிலையில் தான் வேலை பார்க்கும் கம்பெனியில் தமிழ் ( ஆதிரா ) என்கிற பெண் மீது காதல் வயப்படுகிறான் ருத்ரன்.
படிக்க வேண்டிய வயதில் யோசிக்காமல் விளையாட்டாக செய்த செயல்களால், பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் ருத்ரன், அதிலிருந்து மீண்டு வந்து தான் விரும்பிய காதலியோடு சேர்ந்தானா ? அவனது பெற்றோர் என்ன ஆனார்கள் என்பது மீதிக்கதை…
வயது கோளாறால் எதையும் யோசிக்காமல் செய்யும் தவறுகளால், இளைஞர்களின் திசைமாறும் வாழ்க்கையை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என இந்தக் கதையை தேர்வு செய்த இயக்குநர், திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இந்தப் படம் வெகுஜன மக்களை சென்றடைந்திருக்கும்.
மகேந்திரன், ஜி.எம். சுந்தர், ஆதிரா, தாசரதி உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.