“கேங்கர்ஸ்” படத்தில் தொடர்கிறதா ? வடிவேலு காமெடி சாம்ராஜ்யம் !

அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு சுந்தர் சி தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் சுந்தர் சி, வடிவேலு, கேத்ரின் தெரசா, மைம் கோபி, முனிஸ்காந்த், வானி போஜன், பக்ஸ், காளை, ஹரீஷ் பெராடி, அருள்தாஸ், சந்தான பாரதி, விச்சு, மாஸ்டர் பிரபாகர், மது சூதன் ராவ், ரிஷி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “கேங்கர்ஸ்”.
கதைப்படி.. தனியார் பள்ளியில் படித்து வரும் ஒரு சிறுமி தொலைந்து போகிறார். அங்கு ஆசிரியராக இருக்கும் கேத்ரின் தெரசா சிறுமியை தேடி அலைகிறார். இந்த சூழலில், சிறுமிக்கு என்ன தான் நடந்தது என்பதை கண்டறிய உளவுத்துறை போலீஸ் ஒருவர் நியமிக்கப்படுகிறார்.
இந்த சமயத்தில், பள்ளியின் புது உடற்கல்வி ஆசிரியர் என்று சுந்தர் சி வருகிறார். ஏற்கனவே வடிவேலு அங்கு உடற்பயிற்சி ஆசிரியராக இருந்து வருகிறார். பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக புகார் கொடுத்ததால் நிர்வாகத்தினரான மைம் கோபி மற்றும் அருள்தாஸ் இருவரும் கேத்ரினை அவமானப்படுத்துகின்றனர்.

இந்த சமயத்தில் சுந்தர் சி, முகத்தில் துணியை மாட்டிக் கொண்டு மைம் கோபி மற்றும் அருள்தாஸ் இருவரையும் கடுமையாக தாக்குகிறார்.
எதற்காக இவர்களை சுந்தர் சி தாக்க வேண்டும் .? சுந்தர் சி இந்த கதைக்குள் வந்ததன் நோக்கம் தான் என்ன ..? என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனாக வரும் சுந்தர் சி, வழக்கம் போல் தனது கேரக்டரை மிக அழகாகவும், தெளிவாகவும் செய்து முடித்திருக்கிறார். முதல் பாதியில் வரும் சண்டைக் காட்சியை சற்று குறைத்திருக்கலாம். இயல்பான சண்டைக் காட்சியாக அதை கொண்டு சென்றிருக்கலாம்.

வடிவேலு மற்றொரு கதாநாயகன் என்று தான் கூற வேண்டும். இவருக்கான கதாபாத்திரத்தை அவ்வளவு காமெடியாக கொண்டு சென்றிருக்கின்றனர்.
ஆரம்பத்தில் வடிவேலு கதாபாத்திரம் சற்று சோதனை கொடுத்தாலும், காட்சி நகர நகர சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் தன்னை அர்ப்பணித்து படம் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களிலும் காமெடி கண்ணீரை வரவழைத்துவிட்டார் வடிவேலு.
அதிலும் குறிப்பாக இரண்டாம் பாதியில் மிஷன் 1, 2, 3 என்று செல்லும் ஒவ்வொரு காட்சியிலும் சிரித்து சிரித்து வயிறு குலுங்க வைத்துவிட்டார் வடிவேலு. குறிப்பாக சிறுவர்களையும் சிறுமிகளையும் வெகுவாகவே கவர்ந்து சென்றிருக்கிறார்.

சுந்தர் சி – வடிவேலு காம்போவில் இப்படமும் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது. கிலுகிலுப்புக்கும் அழகுக்கும் நடிப்புக்கும் எந்தவிதத்திலும் குறை வைக்காமல் நடித்திருக்கிறார் கேத்ரின் தெரசா. குப்பன் பாடலுக்கு நம்மையும் சேர்த்து ஆட்டம் போட வைத்திருக்கிறார் கேத்ரின் தெரசா.
பக்ஸ், காளை, முனீஸ்காந்த் உள்ளிட்ட நட்சத்திரங்களின் காமெடிகளும் ரசிக்கும் படியாக இருந்தது. வில்லன்களாக மைம் கோபி, அருள்தாஸ், மற்றும் ஹரீஷ் பெராடி உள்ளிட்டவர்கள் அதிரடி காட்டியிருக்கின்றனர்.
படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.