டீச்சரை பெண் கேட்கும் மாணவன், குழந்தைகளின் நாயகன் ஆதி !.? “P T சார்” படத்தின் திரைவிமர்சனம்
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் சார்பில் ஐசரி ஆர் கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி, காஷ்மீரா பர்தேஷி, தியாகராஜன், கே. பாக்கியராஜ், பிரபு, ஆர். பாண்டியராஜன், இளவரசு, முனிஷ்காந்த், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், ஒய்.ஜி. மதுவந்தி உள்ளிட்டோர் நடிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “P.T சார்”.
கதைப்படி.. ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக ( P.E.T ) வேலை பார்க்கிறார் கனகவேல் ( ஹிப் ஹாப் தமிழா ஆதி ). பள்ளியில் அந்த ஆண்டின் விளையாட்டு விழா வேண்டாம் என மற்ற ஆசிரியர்கள் முடிவெடுத்து, தலைமை ஆசிரியர் மூலம் அறிவிப்பு வெளியிடவும் செய்கிறார்கள். விளையாட்டில் பங்குபெற வேண்டும் என குழந்தைகள் விரும்புகிறார்கள். இந்தப் பிரச்சினையை கனகவேல் சுமூகமாக கையாண்டு விளையாட்டு விழா நடத்த அனுமதி வாங்குகிறார். இவருக்கு ஆங்கில ஆசிரியை வானதியை ( காஷ்மீரா ) காதலிக்கிறார். பள்ளியில் ஒரு அடிதடி சம்பவம் நடக்கும்போது ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார். அப்போது வானதி டீச்சர் எதிர்த்து குரல் கொடுத்து பிரச்சினையை முடித்து வைக்கிறார்.
ஏனென்றால் எந்தவித வம்பு தும்புக்கும் போகக்கூடாது என அவரது அம்மா சொல்லியிருக்கிறார். கனகவேல் தாய் சொல்லைத் தட்டாத மகனாக இருப்பதால் நமக்கு எதுக்கு வம்பு என ஒதுங்கி இருக்கிறார். அவ்வப்போது இருவருக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும், கனகவேலின் விடாமுற்சியால் வானதி அவரது காதலை ஏற்றுக்கொள்கிறார். பின்னர் இருவரது வீட்டிலும் பேசி முடித்து நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்கின்றனர். அதற்கான வேலைகளும் நடைபெறுகிறது.
இந்நிலையில் எதிர் வீட்டுப் பெண்ணின் தந்தையை ( இளவரசு ) காவலர் ஒருவர் தொடர்பு கொண்டு, ஒரு பெண்ணின் சடலம் கிடைப்பதாக கூறி அழைக்கிறார். அப்போது கனகவேல் அவருடன் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு நடைபெறும் சம்பவங்களைப் பார்த்து வெகுண்டெழுகிறார். போராட்டத்தில் இறங்குகிறார்.
இதுவரை கோழையாக இருந்த கனகவேல், தாயின் பேச்சை மீறி எதற்காக போராடத் துடிக்கிறார் ? அவருக்கும் வானதிக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததா ? அவரது காதல் என்னாச்சு என்பது மீதிக்கதை..
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை துல்லியமாக காட்சிப்படுத்தியதோடு, பிரச்சினைகளுக்கு அவர்கள் அணியும் ஆடைகள் காரணம் இல்லை என்பதையும் சொல்லி தீர்வுகாண முயன்றிருக்கிறார் இயக்குநர்.
குழந்தைகள் வெளியில் சொல்ல முடியாத விஷயங்களை, மந்திர சுவரில் எழுதினால் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களின் மனச்சுமையை குறைக்கிறார். நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை எதார்த்தமாக காட்சிப்படுத்தி, படம் பார்க்கும் நமக்கும் கதைக்கும் சம்பந்தப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.
நாயகன் ஆதி குழந்தைகளுடன், குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக இந்தப் படத்தின் மூலம் உருவெடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
நடிகர் இளவரசு, பட்டிமன்றம் ராஜா, தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், நாயகி காஷ்மீரா, பிரபு, தியாகராஜன், பாக்கியராஜ், பாண்டியராஜன், முனிஷ்காந்த் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.