பொங்கலை ரசித்து சிரிக்க வைத்த சுந்தர்.சி ! “மதகஜராஜா” திரைவிமர்சனம்
ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், விஷால் சந்தானம் வரலெட்சுமி, அஞ்சலி, சோனு சூட், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “மதகஜராஜா”.
கதைப்படி.. கிராமத்தில் கேபிள் ஆபரேட்டராக இருக்கும் மதகஜராஜா ( விஷால் ), வழக்கு சம்பந்தமாக தந்தையுடன் வரும் அஞ்சலி மீது காதல் வயப்படுகிறார். பின்னர் தனது ஆசிரியரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்கிறார். அங்கு தன்னுடன் படித்த பால்ய நண்பர்களான சந்தானம், நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ் ஆகியோரும் வருகின்றனர். ஆசிரியரின் மகள் தனது முறை பையனை விரும்புகிறார். கல்யாணம் நடப்பதில் பிரச்சினைகள் வர, நண்பர்கள் உதவியுடன் கல்யாணத்தை நடத்தி வைக்கிறார் விஷால்.
அதன்பிறகு அனைவரும் கிளம்ப தயாரானபோது ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரச்சினையுடன் வந்திருப்பது விஷாலுக்கு தெரிய வருகிறது. சென்னையில் பிரபல செய்தித்தாள், தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்துவதோடு, அரசியல்வாதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, அரசாங்கத்தையே மிரட்டி வரும் சோனு சூட்டால் இரண்டு நண்பர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது இழப்பை சரிசெய்து, பிரச்சினைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என சென்னை கிளம்பிச் சென்று, சோனு சூட்டை எதிர்த்து போராடுகிறார்.
விஷால் போராட்டம் என்னவானது ? அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன ? நண்பர்களை பிரச்சினைகளில் இருந்து விடுவித்தாரா ? என்பது மீதிக்கதை..
படம் தயாரித்து 12 ஆண்டுகளானாலும் , இப்போதும் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் சுந்தர் சி. சந்தானத்தின் டயலாக் அனைத்தும் ரசித்து சிரிக்கும் விதமாக எழுதியிருக்கிறார். ஆக்ஷன், காதல், நட்பு மூன்றையும் சம அளவில் கலந்து தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஷால். விஷால், சந்தானம் கூட்டணி, ஆர்யா சிறப்புத் தோற்றம், இந்த மூவரின் கலக்கல் காமெடி சிறப்பு.
மணோபாலா, விஷால், சந்தானம் மூவரும் வரும் காட்சிகளில், லாஜிக் இல்லை என்றாலும் சிரிக்க வைக்கின்றனர். அஞ்சலி, வரலெட்சுமி இருவரும் ஆபாசத்தை தனது தோற்றம் மூலம் அள்ளி வழங்கியிருக்கிறார்கள். படம் முழுவதையும் களகளப்பான திரைக்கதையுடன் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.