“வணங்கான்” படத்தின் திரைவிமர்சனம்
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், பாலா இயக்கத்தில், அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், ரிதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வணங்கான்”.
கதைப்படி.. உலகையே நடுங்க வைத்த சுனாமி பேரலை யின் போது பெற்றோரை இழந்து, அனாதையாக திரியும் அருண் விஜய் ( கோட்டி ), அதேபோல் அழுது கொண்டிருக்கும் பெண் குழந்தைக்கு ஆதரவு கொடுத்து, தன் தங்கையாக வளர்க்கிறார். இவருக்கு காது கேட்காது, வாய் பேசவும் முடியாது. ஆனால் பயங்கரமான முன் கோபக்காரர். இவர்கள் இருவருக்கும் பாதிரியார் ஆதரவாக இருக்கிறார். தன் கண்முன்னே தவறு நடந்தால் உடனடியாக தட்டிக்கேட்கும் சுபாவம் கொண்ட இவர், ஊர் வம்பு வேண்டாம் என ஆதரவற்றோர் இல்லத்தில் வேலை வாங்கித் தருகிறார் பாதிரியார்.
அங்கு பார்வையற்ற பெண்கள் குளிப்பதை மூன்றுபேர் பார்த்து ரசிக்கிறார்கள். அதை உணர்ந்த பெண்கள் கதவை பூட்டி விட்டு அருண் விஜயிடம் தகவல் கூற, அதில் இருவரை கொடூரமான முறையில் கொலை செய்கிறார். பின்னர் தானாகவே போலீஸில் சரணடைகிறார். எதற்காக கொலை செய்தார் என்பதை போலீசாரிடம் கூற மறுக்கிறார். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் ஒருவரை கொலை செய்கிறார். எதற்காக கொலை செய்தார் என்கிற காரணத்தைத் தேடி போலீஸாரிடம் சொல்ல மறுக்கிறார்.
போலீஸார் கொலைக்கான காரணத்தை தேடி கண்டுபிடித்தார்களா இல்லையா என்பது மீதிக்கதை…
பாலா இயக்கத்தில் ஏற்கனவே விக்ரம் பிதாமகன் படத்தில் ஏற்று நடித்த சித்தா கதாப்பாத்திரம் தான் வணங்கானில் கோட்டி கதாப்பாத்திரம். நடை, உடை, பாவனை அனைத்தும் பிதாமகன் சாயலில் அப்படியே அச்சு பிசகாமல் நடித்திருக்கிறார் அருண் விஜய். இந்த படத்தின் மூலம் நல்ல நடிகராக உருமாறி இருக்கிறார் அருண் விஜய். அவரது நடிப்பில் வெளிவந்துள்ள எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்பார்ப்பு இந்தப் படத்திற்கு இருந்தது.
வழக்கமான பாலா படங்களுக்கு ஒருவித எதிர்பார்ப்பு ஏற்படும். ஆனால் இந்தப் படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதுமைகள் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு பாலா படம் வெளியாவதால், பாலாவுக்காக தியேட்டருக்கு வரும் கூட்டம் குறையவில்லை என்றாலும், மிஞ்சியது ஏமாற்றமே. சமுத்திரக்கனி வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மிஷ்கின் இந்தப் படத்தின் மூலம் நடிப்பில் தேரியிருக்கிறார்.
கதாநாயகி, தங்கை கதாப்பாத்திரம் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.