சிறையின் கணினி தளவாடங்களை ஹேக் செய்த தீவிரவாதிகள் ! மிஷன் சாப்டர்-1 திரைவிமர்சனம்
லைகா நிறுவனம் தயாரிப்பில், அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன்,அபி ஹாசன், பரத் போபண்ணா உள்ளிட்டோர் நடிப்பில், ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “மிஷன் சாப்டர்-1”.
கதைப்படி… மகளின் சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார் குணசீலன் ( அருண் விஜய் ). லண்டன் மருத்துவமனையில் குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்கு நாள் குறிக்கப்படுகிறது. அந்த மருத்துவமனையில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ( நிமிஷா சஜயன் ) உதவியாக இருக்கிறார். அறுவைச் சிகிச்சைக்கு தேவையான பணத்தை ஹவாலா மூலம் பெறுவதற்காக, அடையாளமாக கொடுத்த பத்து ரூபாய் நோட்டை கொண்டு செல்கிறார். இதை கொள்ளையடிக்க ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. அப்போது ஏற்பட்ட மோதலில் குணசீலன் தாக்குதலில் ஈடுபட்டதால், லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்ல நேரிடுகிறது.
இதற்கிடையில் லண்டன் சிறையிலிருந்து சில தீவிரவாதிகளை தப்பிக்க வைப்பதற்காக, சிறையின் கணினி தளவாடங்களை ஹேக் செய்து கலவரத்தை உருவாக்கி சிறையின் அதிகாரி எமி ஜாக்சனை மிரட்டுகின்றனர். இதையறிந்த குணசீலன் தீவிரவாதிகளின் திட்டத்தை முறியடிக்க முயற்சிக்கிறார்.
குணசீலன் சிறையில் நடைபெறும் கலவரத்தை அடக்கி, தீவிரவாதிகளின் முயற்சியை முறியடித்தாரா ? அவரது குழந்தையின் அறுவைச் சிகிச்சை என்னானது ? குழந்தை உயிர் பிழைத்தாரா என்பது மீதிக்கதை…
ஹவாலா மூலம் பணம் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை தெளிவாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர். அருண் விஜய்க்காக ஆக்ஷ்ன் காட்சிகளுடன் திரைக்கதை எழுதிய விஜய், இன்னும் சென்டிமென்ட் காட்சிகளை சேர்த்திருக்கலாம். அருண் விஜய் வரும் காலங்களில் ஆக்ஷ்ன் ஹீரோவாக பேசப்படுவார். அருண் விஜய் சினிமா கேரியரில் “மிஷன் சாப்டர்-1” முக்கியமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எமி ஜாக்சன் நடிப்பும் சிறப்பு.