குடோனில் சிக்கிய 1 டன் குட்கா ! போலீஸாரின் அதிரடியால் கலக்கத்தில் கடத்தல் கும்பல் !

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிமேடு பகுதியில் சட்டவிரோதமாக குட்கா விற்கப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து ஆய்வாளர் மாதையன் தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான சொகுசுக்காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது காரில் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனையடுத்து பிடிபட்ட நபரை பல்லடம் காவல் நிலையம் அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் பிடிபட்ட நபர் திண்டுக்கல் மாவட்டம் பட்டிராம்பட்டியை சேர்ந்த விஜய் கண்ணன் என்பதும், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் குடோன் வைத்துள்ளதாகவும், குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அதனையடுத்து விஜய் கண்ணனை கைத்ய் செய்த போலீசார் கருமத்தம்பட்டி குடோனில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த ஒரு டன் குட்காவை கைப்பற்றியதோடு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசுகாரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட விஜய் கண்ணனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்லடம் காவல் ஆய்வாளரின் மாதையனின் அதிரடி நடவடிக்கையால், சட்டவிரோத குட்கா வியாபாரிகளை கலக்கமடையச்செய்துள்ளது.