பழனி பேருந்து நிலையத்தில், பயணிகளுக்கு இடையூறு செய்த இருசக்கர வாகன ஓட்டிகள் !
பழனி நகராட்சி வ.உ.சி. மத்திய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து பழனி கோயில் முருகனை தரிசிக்கவும், பணி நிமித்தம் காரணமாகவும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பயணிகள் நடந்து செல்லும் வழியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பேருந்து நிலையத்திற்குள் அதி வேகமாக பயணம் செய்வதும், பயணிகள் நடந்து செல்லும் பாதையில் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வதாலும் பொதுமக்கள், பயணிகள் அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக பழனி நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் சென்றுள்ளது.
பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் பொதுமக்கள் நடந்து செல்லும் வழியில் இருசக்கர வாகனங்கள் நுழையாத வகையில் கம்பி அமைக்கப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. என்னதான் பாதுகாப்பு செய்தாலும் வாகன ஓட்டிகள் வாகனத்தை உள்ளே தானே ஓட்டி செல்லக்கூடாது வெளியே நிறுத்தி சென்றால் என்ன ? என்பது போல் நுழைவு வாயிலின் முன்பாக வாகனத்தை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகள் வெளியே வர நுழைவு வாயிலை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து பழனி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் பழனி மத்திய பேருந்து நிலையம் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து வாகனங்களை அப்புறப்படுத்தி பொதுமக்கள் மற்றும் பயணிகள் நடந்து செல்வதற்கு வழிவகை செய்துள்ளனர்.
கா.சாதிக்பாட்ஷா