சீயான் விக்ரமின் “வீர தீர சூரன்” படத்தின் விமர்சனம்

ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரியா ஷிபு தயாரிப்பில், விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடிப்பில், எஸ்யு அருண்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “வீர தீர சூரன்”.
கதைப்படி.. கோவில் திருவிழா நாளன்று ஊர் பெரியவர் ரவி ( பிருத்விராஜ் ) வீட்டின் வாசலில் ஒரு பெண் தனது குழந்தையுடன் வந்து, எனது புருஷன் எங்கே ? நீங்கள்தான் மறைத்து வைத்துள்ளீர்கள், அவரை என்ன செய்தீர்கள் ? என வீட்டின் வாசலில் அமர்ந்து தகராறு செய்கிறார். அவரை ரவியின் மகன் கண்ணன் ( சுராஜ் வெஞ்சரமூடு ) உள்ளிட்ட குடும்பத்தினர் அங்கிருந்து அடித்து விரட்டி விடுகிறார்கள். அதே சமயம் அவரது கணவர் தன் மனைவியை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அந்த நேரத்தில் காவல்நிலையத்திற்கு வரும் எஸ்பி அருணகிரியுடம் ( எஸ்ஜே சூர்யா ) பெரியவர் வீட்டிற்கு சென்ற எனது மனைவியை காணவில்லை, பெரியவர் தான் ஏதோ செய்திருப்பார், எனது மனைவியை சீக்கிரம் கண்டுபிடித்து தாருங்கள் கூறுகிறார்.

ஏற்கனவே பெரியவர் ரவி மற்றும் அவரது மகன் கண்ணன் மீது உள்ள முன் பகையை தீர்த்துக் கொள்ள இதுதான் சமயம் என நினைத்து, அந்த புகாரின்பேரில் கண்ணன் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டு, இரவோடு இரவாக கண்ணனை என்கவுண்டர் செய்ய தனிப்படை அமைக்கிறார் எஸ்பி. இந்த தகவல் பெரியவர் ரவிக்கு தெரியவர மகனை தலைமறைவாக இருக்கச் சொல்லிவிட்டு, எஸ்பியை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்.
அதற்காக தனது விசுவாசியான காளியின் உதவியை நாடுகிறார் பெரியவர் ரவி. காளி மனைவி, குழந்தைகளுடன் மளிகைக்கடை நடத்திக்கொண்டு சந்தோஷமாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்துவரும் நிலையில், நீண்ட யோசனைக்குப் பிறகு சம்மதித்து ஆயுதங்களை பெற்றுக்கொண்டு செல்கிறார். ஊர் மக்கள் அனைவரும் திருவிழாவிற்கு செல்லும் சமயத்தில், கண்ணனை என்கவுண்டர் செய்ய நேரம் குறிக்கிறார் எஸ்பி. அதே சமயம் எஸ்பியை முடிக்க காளியின் மூலம் திட்டம் தீட்டுகிறார் ரவி.

இந்நிலையில், காளியை வைத்து எஸ்பி அருணகிரி ஒரு திட்டத்தை தீட்டுகிறார். பின்னர் போலீஸ் கண்ணனை என்கவுண்டர் செய்ததா ? எஸ்பி அருணகிரி கொள்ளப்பட்டாரா ? இந்த பரமபத ஆட்டத்தில் விக்ரமின் பங்கு என்ன ? என்பது மீதிக்கதை…
படம் துவக்கம் முதல் புதுவிதமான வித்தியாசமான திரைக்கதையுடன் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். கதாப்பாத்திர தேர்வும், அவர்களின் திறமைக்கேற்ப நடிகர்களை கையாண்ட விதமும் அருமை.
சீயான் விக்ரம், காளி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட, கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். அதேபோல் அவரது மனைவியாக நடித்துள்ள துஷாரா விஜயன், சந்தோஷம், சோகம், பரிதவிப்பு என தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதேபோல் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் தனது பின்னணி இசையால், பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கிறார்.