பல்லடம் அருகே.. ஆசைகாட்டி நகை பறிப்பில் ஈடுபட்ட “போலி நிருபர்” உள்பட 6 பேர் கைது !

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே போலி நிருபர் தலைமையில், ஆறுபேர் கொண்ட கும்பல், பெண் ஆசைக்காட்டி நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்துள்ள சின்னியகவுண்டன் பாளையத்தில், பழனிச்சாமி என்பருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இதன் அருகே உள்ள வீட்டில் குடியிருந்து வருபவர் திருச்சியை சேர்ந்த 45 வயதான பெண் தேவி. இவர் காங்கேயத்தை சேர்ந்த குமார் (43) என்பருடன் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
தேவி தனது பேச்சில் குமாரை மயக்கி தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

பின்னர் தேவியின் வீட்டிற்கு இரவு சுமார் 10 மணிக்கு வந்த குமார், தேவி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதனிடையே திடீரென கதவை திறந்துகொண்டு வீட்டிற்குள் புகுந்த நான்குபேர் கொண்ட கும்பல், இருவரையும் வீடியோ எடுத்து மிரட்ட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் குமார் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்ததோடு, வெளியே சொன்னால் வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்து தப்பி வந்த குமார், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், நகைபறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தேவி மற்றும் மூளையாக செயல்பட்ட பல்லடம் ராயர்பாளையத்தை சேர்ந்த போலி நிருபர் தினகரன் (42), பல்லடத்தை சேர்ந்த குமார் (29), அம்மாபாளையத்தை சேர்ந்த ராஜதுரை (24), மாணிக்காபுரத்தை சேர்ந்த பரத் (22) மற்றும் மேற்கு பல்லடத்தை சேர்ந்த துரைராஜ் (29) ஆகிய ஆறு பேரையும் இரவோடு, இரவாக கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று சவரன் தங்க நகை மற்றும் பிரஸ் என ஒட்டப்பட்டிருந்த காரை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து வழக்கில் தொடர்புடைய ஆறு பேரையும், நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தினகரன், தேவி ஆகியோர் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் பல்லடத்தை அடுத்த அவினாசிபாளையம் அருகே ஒரு கோடியே பத்து லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் மூளையாக செயல்பட்ட குளித்தலையை சேர்ந்த நிருபர் அலாவுதீன் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் தொடர்ச்சியாக பல்லடத்தில் போலி நிருபர் கைவரிசை காட்டி நகை பறிப்பில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.