பல்லடத்தில் சட்டவிரோத சிலிண்டர் தொழிற்சாலையில் தீ விபத்து – 2 பேர் படுகாயம் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது சுக்கம்பாளையம் கிராமம். இப்பகுத்திக்குட்பட்ட கல்லுக்குத்திகாட்டில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமாக சுமார் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த இடத்தில் 5 வீடுகளை கட்டி சாமிநாதன் வாடகைக்கு விட்டுள்ளார். இதில் ஒரு வீட்டில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த முருகன் (46) என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாடகைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி வீட்டில் வீட்டு உபயோக சிலிண்டரில் இருந்து மோட்டார் மூலம் வணிக பயண்பாட்டு சிலிண்டருக்கு எரிவாயுவை சட்டவிரோதமாக மாற்றி அதிக விலைக்கு விற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் சிலிண்டரில் இருந்து எரிவாயுவை மாற்றிகொண்டிந்தபோது வாயு கசிவு ஏற்பட்டு திடீரென பயங்கர சத்தத்துடன் தீ பற்றியுள்ளது. இதில் வீட்டின் மேற்கூரை சுக்குநூறாக நொறுங்கியுள்ளது.
மேலும் தீவிபத்தில் முருகனுக்கு 70% தீ காயங்களும் உடன் வேலை பார்த்து வந்த தென்காசியை சேர்ந்த செல்வகணேஷ் (26) என்பவருக்கு 40% தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மானிய விலையில் வீட்டு உபயோக சிலிண்டரை மொத்தமாக வாங்கி இது போன்று சட்டவிரோதமாக வணிக பயண்பாட்டு சிலிண்டரில் நிரப்பி விற்பனை செய்துவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரே நிறுவன சிலிண்டர்கள் அதிக அளவில் இருந்ததால் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு தொடர்பிருக்க வாய்ப்பிருப்பதாக பொதுமக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.