“டெக்ஸ்டர்” படத்தின் விமர்சனம்

ஆர். ராம் எண்டர்டெய்னர்ஸ் நிறுவனம் சார்பில், பிரகாஷ் எஸ் வி தயாரிப்பில், சூரியன் ஜீ இயக்கத்தில், ராஜீவ் கோவிந்த பிள்ளை, யுக்தா பெர்வி, ஹரிஸ் பெராடி , அபிஷேக் ஜோஸப் ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “டெக்ஸ்டர்”.
கதைப்படி… நாயகன் ராஜீவும், நாயகி யுக்தா பெர்வியும் ஒருவரையொருவர் நேசித்து, காதல் வானில் சிறகடித்து பறப்பதுபோல் சந்தோஷமாக சுற்றித்திரிகிறார்கள். காதல் மனைவிக்காக வாங்கிய வீட்டை காண்பிக்கக்க சென்றபோது, காதலி மர்மநபரால் கடத்தப்படுகிறார். பின்னர் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், காதலியின் பிரிவை தாங்க முடியாமல், மதுவுக்கு அடிமையாகி தற்கொலைக்கு முயல்கிறார்.

அப்போது நண்பர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு, பழைய நினைவுகளை அழிக்கும் புதிய சிகிச்சை அளித்து, புதிய மனிதராக வருகிறார். இந்நிலையில் புதிய வீட்டில், ஒரு பெண் இவரை சகோதர பாசத்துடன், இவருக்கு தேவையான உதவிகளைச் செய்கிறார். நாட்கள் கடந்த நிலையில், அந்தப் பெண்ணும் மர்ம நபரால் கடத்தப்படுகிறார்.
ராஜீவுக்கும், மர்ம நபருக்கும் என்ன சம்பந்தம் ? அவர் ஏன் யுக்தா பெர்வியை கடத்தி கொலை செய்தார் என்பது மீதிக்கதை..
இளம் வயதில் மனதில் வடுவாக உருவான சம்பவத்திற்கு, பழிவாங்குவது தான் “டெக்ஸ்டர்” படத்தின் கதை. இயக்குநர் மிகவும் திறமையாக த்ரில்லர், சென்டிமென்டுடன் ரசிக்கும்படியாக திரைக்கதை அமைத்துள்ளார். நாயகன் பாசம் கலந்த கோபக்கார கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சிகள் பிரமாதம். நாயகி யுக்தா பெர்வி, ஹரிஸ் பெராடி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.