விபத்தில் சிக்கிய பெண்னை அரை கிலோ மீட்டர் இழுத்துச் சென்ற கொடூரம் ! ரத்த வெள்ளத்தில் உடல் சிதைந்து பலியான பெண்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே நடந்த சாலை விபத்தில் மனிதர்களிடையே மனிதாபிமானம் மறுத்துப்போனதா ? என கேள்வி எழுகிறது. பல்லடத்தை அடுத்த குப்புசாமி நாயுடுபுரம் கோவை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. நான்கு வழிச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாலை பராமரிப்பு பணிகள் நடந்துமுடிந்த நிலையில், சரியான திட்டமிடல் இல்லாமல் சாலை போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் விபத்துக்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே காரணம்பேட்டையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி கடைக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், மூன்று பேர் காயமடைந்தனர். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் இன்று குப்புசாமிநாயுடு புரத்தை அடுத்த அய்யம்பாளையம் பிரிவில் கோவையை நோக்கி சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டரை பின்னாள் வந்த கார் மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து வந்த பெண் காரின் முன்பகுதியில் சிக்கிக்கொண்டார். இந்நிலையில் காரை ஓட்டிவந்த நபர் காரை நிறுத்தாமல் அதிவேகமாக காரில் சிக்கிய பெண்ணின் உடலை சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச்சென்றார். பின்னிட்டு உடல் விடுபட்டதும் காரை நிறுத்தாமல் அதிவேகமாக தப்பிச்சென்றார்.

ஞாயிற்று கிழமை சந்தை நடைபெற்று வந்த நிலையில் கார் பயங்கர சத்தத்துடன் பிரேக் அடித்ததை கண்டு அருகே வந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் பெண் ஒருவர் உடல் சிதைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விபத்து குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு விபத்தில் பலியான பெண் குறித்தும் விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற கார் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் மோதிய காரி ஓட்டுநர், காரை நிறுத்தாமல், மனிதாபிமானமின்றி சுமார் அரை கிலோமீட்டர் வரை இழுத்துச்சென்று பின்னர் தப்பிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.