சந்தானம் படம் பார்க்கும் ரசிகர்களும் கிங்கு தான் ! “இங்கு நான் தான் கிங்கு” விமர்சனம்
கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சுஷ்மிதா அன்புச் செழியன் தயாரிப்பில், சந்தானம், ப்ரியாலயா, தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா, முனிஷ்காந்த், மாறன் உள்ளிட்டோர் நடிப்பில், ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “இங்கு நான் தான் கிங்கு”.
கதைப்படி.. நாயகன் வெற்றிவேல் ( சந்தானம் ) தாய், தந்தை, உறவுகள் யாரும் இல்லாத தனி நபராக சென்னையில் வசித்து வருகிறார். இவர் திருமணம் செய்துகொள்ள பெண் தேடி அழைக்கிறார். சில இடங்களில் சொந்த வீடு இருந்தால்தான் என்றதால், 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கி வசித்து வருகிறார். பெண் பார்பதற்காகவே திருமண தகவல் மையத்தில் வேலைக்கு சேர்கிறார். அப்போது ஜமீன் குடும்பத்து சம்பந்தம் வந்திருப்பதாக, கல்யாண தரகர் மனோபாலா அழைத்துச் செல்கிறார். வெற்றியும் ஜமீன் குடும்பம் என்றதும் அதீத கற்பனையில், வரதட்சணை பணத்தில் வீட்டிற்கு வாங்கிய கடனை அடைத்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என சந்தோஷமாக செல்கிறார். ஜமீன்தார் மகள் தேன்மொழிக்கும் ( ப்ரியாலயா ) வெற்றிக்கும் திருமணம் நடக்கிறது.
இதற்கிடையில் சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு வைத்து, தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபட இருப்பதாக வந்த தகவலையடுத்து, தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடிக்க காவல்துறையினர் தயாராகின்றனர். இந்நிலையில் வெற்றியின் வீட்டில் தீவிரவாத கும்பலை சேர்ந்த ஒருவன் சிக்கிக் கொள்கிறான்.
வெற்றியின் வீட்டிற்கு தீவிரவாதி எதற்காக, எப்படி வந்தான் ? தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை காவல்துறையினர் முறியடித்தார்களா ? குண்டு வெடித்ததா ? சொந்தவீடு வாங்குவதற்கு வாங்கிய கடனை வெற்றி அடைத்தானா ? என்பது மீதிக்கதை..
சமீப காலமாக தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், சந்தானம் படம் என்றதும் ஒருவித எதிர்பார்ப்பு இருந்தது. இந்தப் படத்தில் அதுபோன்ற காட்சிகள் இல்லை என்றாலும், வித்தியாசமான கதைக்களத்தில் ஒட்டுமொத்த படத்தையும் சந்தானமே தூக்கி சுமக்கிறார்.
இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி, சந்தானத்திற்கு என இருக்கும் ஓப்பனிங் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கலாம்.
காதாநாயகி தனக்கான பணியை சிறப்பாக செய்திருக்கிறார். தம்பி ராமையா ஓவர் ஆக்டிங் செய்து சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தும் விதமாக நடித்திருக்கிறார். அவரது மகனாக பால சரவணன் மற்றும் மாறன், முனிஷ்காந்த் போன்றோர் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள். விவேக் பிரசன்னாவின் இரட்டை வேடங்கள் பெரிதாக சோபிக்கவில்லை. மற்றபடி படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஜாலியாக சிரித்து மகிழ வழக்கமான சந்தானம் படம் என நினைத்து தியேட்டருக்கு சென்றால் ஏமாற்றமே ! படம் முழுவதையும் பொறுமையாக பார்ப்பவர்கள் தான் கிங்கு எனலாம்.